பேரணாம்பட்டு அருகே மழையால் குடிசை வீட்டின் சுவர் இடிந்து மாணவி பலி - தாத்தா, பாட்டி படுகாயம்


பேரணாம்பட்டு அருகே மழையால் குடிசை வீட்டின் சுவர் இடிந்து மாணவி பலி - தாத்தா, பாட்டி படுகாயம்
x
தினத்தந்தி 29 Jun 2020 11:15 PM GMT (Updated: 29 Jun 2020 8:31 PM GMT)

பேரணாம்பட்டு அருகே மழை காரணமாக குடிசை வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மாணவி உயிரிழந்தாள். மேலும் தாத்தா-பாட்டி படுகாயம் அடைந்தனர்.

பேரணாம்பட்டு,

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகே உள்ள பொகளூர் கிடங்கு ராமாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் குப்புசாமி. அவருடைய மனைவி உஷா. இவர்களுக்கு ராஜேஷ் (வயது 15) என்ற மகனும், பவித்ரா (14) என்ற மகளும் உள்ளனர். ராஜேஷ் 10-ம் வகுப்பும், பவித்ரா 9-ம் வகுப்பும் பல்லலகுப்பம் கிராமத்தில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர்.

இவர்களது பெற்றோர் பெங்களூருவில் தங்கி வேலை செய்து வருவதால் அண்ணன், தங்கை இருவரும் பொகளூர் கிடங்கு ராமாபுரம் கிராமத்தில் உள்ள அவர்களது தாத்தா தேவராஜ் (60), பாட்டி லட்சுமி (50) ஆகியோர் பாதுகாப்பில் இருந்தனர்.

நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் பலத்த மழை பெய்தது. அப்போது பவித்ரா தனது தாத்தா தேவராஜ், பாட்டி லட்சுமி ஆகியோருடன் குடிசை வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர். ராஜேஷ் அந்த பகுதியில் உள்ள மற்றொரு தாத்தா-பாட்டி வீட்டில் தூங்கியுள்ளான்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் திடீரென குடிசை வீட்டின் சுவர் இடிந்து பவித்ரா மீது விழுந்துள்ளது. இதில் அவள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாள். மேலும் இடிபாடுகளில் சிக்கி தேவராஜ், லட்சுமி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து அவர்கள் 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் மேல்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story