கொரோனாவை கட்டுப்படுத்த ஜூலை 7-ந் தேதிக்கு பிறகு கர்நாடகத்தில் தீவிர நடவடிக்கை - மந்திரி ஆர்.அசோக் தகவல்


கொரோனாவை கட்டுப்படுத்த ஜூலை 7-ந் தேதிக்கு பிறகு கர்நாடகத்தில் தீவிர நடவடிக்கை - மந்திரி ஆர்.அசோக் தகவல்
x
தினத்தந்தி 30 Jun 2020 1:45 AM GMT (Updated: 30 Jun 2020 1:45 AM GMT)

“கர்நாடகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஜூலை 7-ந் தேதிக்கு பிறகு தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்” என்று வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் தெரிவித்தார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் கடந்த 10 நாட்களில் கொரோனா பாதிப்பும், பலி எண்ணிக்கையும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உயர்ந்து வருகிறது.

கர்நாடகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் இதுவரை இல்லாத உச்சமாக கொரோனா பாதிப்பு 1,267 ஆக இருந்தது. அதுபோல் அதே நாளில் பலியானவர்களின் எண்ணிக்கையும் 16-ஐ தொட்டது. இதன் மூலம் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 13,190 ஆகவும் பலி எண்ணிக்கை 211 ஆகவும் உயர்ந்தது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அசூர வேகத்தில் அதிகரித்து வந்ததை தொடர்ந்து கர்நாடகத்தில் மீண்டும் தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

சில மந்திரிகளும் இந்த கருத்தை எதிரொலித்தனர். ஆனால் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தப்போவதில்லை என்று அரசு கடந்த வாரம் அறிவித்தது. மாநிலத்தின் பொருளாதார நிலை மற்றும் வளர்ச்சியை கருத்தில் கொண்டு அரசு இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்தது.

மாநிலத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. வருகிற 4-ந் தேதி வரை இந்த தேர்வு நடக்கிறது. அதன் பிறகு கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுக்கும் தகவல்கள் வெளியாகின. இதுபற்றி வருவாய்த்துறை மந்திரியும், கொரோனா நிர்வாக பொறுப்பாளருமான ஆர்.அசோக்கிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த மந்திரி ஆர்.அசோக் “எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதி வரும் மாணவ-மாணவிகளின் நலனுக்காக நீங்கள் ஜூலை 7-ந் தேதி வரை காத்திருக்க வேண்டும். அதன்பிறகு முதல்-மந்திரி எடியூரப்பா கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுப்பார்.” என்றார். மேலும் அவர் கூறியதாவது:-

“மருத்துவ நிபுணர்களின் கருத்துப்படி கர்நாடகத்தில் கொரோனா பரவல், இதே அளவில் தொடர்ந்து நீடிக்கும். ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் கொரோனா பாதிப்பு மோசமான நிலையை அடையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் கொரோனாவை எதிர்கொள்ள இன்னும் 6 மாதங்கள் தங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும். கொரோனா பரிசோதனையை அதிகரித்து இருப்பதும் பாதிப்பு அதிகரிப்புக்கு ஒரு காரணம்.

மேலும் முன்களத்தில் நின்று போராடும் டாக்டர்கள், மருத்துவ ஊழியர்களும் தங்களின் மனநிலையை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். பொதுமக்கள் ஆதங்கப்பட வேண்டாம். டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் தொடர்ந்து, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க உள்ளனர்.

கொரோனா நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை, உணவுகளை அரசு வழங்குகிறது. கொரோனாவுடன் நாம் சேர்ந்து வாழ்வதை தவிர்க்க முடியாது. தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. பொதுமக்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பெங்களூருவில் கொரோனா பரவலை தடுக்க தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது.

விக்டோரியா, ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தேன். நோயாளிகளுக்கு தரமான உணவு வழங்கப்படுகிறது. விக்டோரியா ஆஸ்பத்திரியில் தற்போது 550 படுக்கைகள் கொரோனா நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. புதிதாக 7,000 படுக்கைகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக இயற்கை பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.380 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மாவட்ட நிர்வாகங்களுக்கு ரூ.232 கோடி, சுகாதாரத்துறைக்கு ரூ.70 கோடி, பெங்களூரு மாநகராட்சிக்கு ரூ.50 கோடி, போலீஸ் துறைக்கு ரூ.12 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இன்னும் ரூ.362 கோடி நிதி பேரிடர் நிதியில் இருப்பு உள்ளது.

கொரோனாவை தடுக்க கிருமிநாசினி தெளிக்கும் வாகனங்களை வாங்க முதல்-மந்திரி எடியூரப்பா அனுமதி வழங்கியுள்ளார். தனியார் ஆய்வகங்கள், கொரோனா பரிசோதனை செய்த பிறகு அதன் முடிவை சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவிப்பதற்கு முன்பு பெங்களூரு மாநகராட்சி மற்றும் இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு தெரிவிக்க வேண்டும். இனி தனியார் ஆய்வகங்கள், கொரோனா பரிசோதனையின் முடிவை, நோயாளிகளுக்கு தெரிவிக்கக் கூடாது.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 85 உதவி டாக்டர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க பெங்களூரு மாநகராட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புதிதாக படுக்கைகளை அமைப்பது தொடர்பான பணிகளுக்கு 20 தாசில்தார்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு ஆர்.அசோக் கூறினார்.”

இந்த பேட்டியின்போது போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை உடன் இருந்தார்.

Next Story