கராச்சி பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து மும்பை தாஜ் ஓட்டலுக்கு மிரட்டல் - பலத்த போலீஸ் பாதுகாப்பு


கராச்சி பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து மும்பை தாஜ் ஓட்டலுக்கு மிரட்டல் - பலத்த போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 1 July 2020 4:53 AM IST (Updated: 1 July 2020 4:53 AM IST)
t-max-icont-min-icon

கராச்சியில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து மும்பை தாஜ் ஓட்டலுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மும்பை,

கராச்சியில் உள்ள பாகிஸ்தான் பங்கு சந்தையில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பொதுமக்கள், போலீசார் என 7 பேர் பலியானார்கள். மேலும் தாக்குதல் நடத்திய 4 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலை அடுத்து மும்பையில் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். குறிப்பாக 2008-ம் ஆண்டு பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகளால் மும்பையில் கொடூர தாக்குதலுக்கு உள்ளான தாஜ் ஓட்டல் என்று அழைக்கப்படும் தாஜ் மகால் பேலஸ் ஓட்டல், சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையம், நரிமன் ஹவுஸ், காமா ஆஸ்பத்திரி உள்ளிட்ட 6 இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இதில் கேட்வே ஆப் இந்தியா பகுதியில் அரண்மனை போல அமைந்துள்ள தாஜ் ஓட்டல் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமைந்துள்ளது. அப்போது நடந்த அதி பயங்கர தாக்குதலில் 166 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது நினைவுக்கூரத்தக்கது.

இந்தநிலையில் நேற்று அதிகாலை 12.30 மணிக்கு மும்பை தாஜ் ஓட்டலுக்கு மர்ம போன் அழைப்பு வந்தது. அந்த போனில் பேசிய ஆசாமி, தான் கராச்சியில் இருந்து பேசுவதாகவும், தாஜ் ஓட்டல் தாக்கப்படும் என்றும் மிரட்டி விட்டு இணைப்பை துண்டித்து விட்டான். இதனால் ஓட்டல் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து தாஜ் ஓட்டலை சுற்றிலும் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தாஜ் ஓட்டலுக்கு செல்லும் பாதை அடைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதேபோல பாந்திராவில் உள்ள தாஜ் லேண்ட்ஸ் என்ட் ஓட்டலுக்கும் மிரட்டல் வந்தது தெரியவந்தது. இந்த ஓட்டலுக்கும் பாதுகாப்பு போடப்பட்டது. 2 ஓட்டல் பகுதிகளிலும் அதிவிரைவு படை போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் பெயரில் தான் போனில் பேசிய ஆசாமி மிரட்டல் விடுத்து உள்ளான். கராச்சியில் இருந்து பேசுவதாகவும் தெரிவித்து உள்ளான். இதையடுத்து போன் அழைப்பு விவரங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றார்.

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பெயரில் விடுக்கப்பட்ட மிரட்டல் சம்பவத்தால் மும்பையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Next Story