ஆவூர் அருகே பொதுப்பாதை ஆக்கிரமிப்பு; இருதரப்பினரிடையே மோதல் 5 பேர் கைது


ஆவூர் அருகே பொதுப்பாதை ஆக்கிரமிப்பு; இருதரப்பினரிடையே மோதல் 5 பேர் கைது
x
தினத்தந்தி 1 July 2020 12:54 AM GMT (Updated: 1 July 2020 12:54 AM GMT)

ஆவூர் அருகே பொதுப்பாதையை ஆக்கிரமித்ததால் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதையடுத்து 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆவூர்,

ஆவூர் அருகே உள்ள வடக்கு சோழியக்குடி கிராமத்தை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 45). இவரது வீட்டின் அருகே குடியிருப்பவர் ராசு(50). இவர்களது வீட்டின் நடுவே பொதுப்பாதை செல்கிறது. இந்த பாதையை இருவரும் தனக்கு மட்டும்தான் சொந்தமானது என்று கூறி ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதேபோல் நேற்று முன்தினம் இரவும் அவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு, கைகலப்பாக மாறியுள்ளது. அப்போது பால்ராஜூக்கு ஆதரவாக அதே ஊரை சேர்ந்த முருகனும்(48), ராசுவிற்கு ஆதரவாக அதே ஊரை சேர்ந்த சரவணன்(35), சங்கிலி(37) ஆகியோரும் சேர்ந்து ஒருவரையொருவர் கட்டை போன்றவற்றால் தாக்கிக்கொண்டனர்.

இதில் இரு தரப்பினருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து இருதரப்பினரும் மாத்தூர் போலீஸ் நிலையத்தில் தனித்தனியே அளித்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் பாலாஜி, சப்-இன்ஸ்பெக்டர்கள் கோவிந்தராஜ், செல்வராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பொதுப்பாதையை ஆக்கிரமிப்பு செய்ய முயன்றதோடு தகராறில் ஈடுபட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட இருதரப்பையும் சேர்ந்த பால்ராஜ், முருகன், ராசு, சரவணன், சங்கிலி ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை நேற்று கீரனூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.


Next Story