மூங்கில்துறைப்பட்டு பகுதியில் இலைகருகல் நோயால் நெற்பயிர்கள் பாதிப்பு - விவசாயிகள் கவலை


மூங்கில்துறைப்பட்டு பகுதியில் இலைகருகல் நோயால் நெற்பயிர்கள் பாதிப்பு - விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 1 July 2020 4:00 AM IST (Updated: 1 July 2020 2:18 PM IST)
t-max-icont-min-icon

மூங்கில்துறைப்பட்டு பகுதியில் இலைகருகல் நோயால் நெற்பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மூங்கில்துறைப்பட்டு,

மூங்கில்துறைப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள மைகேல்புரம், ஈருடையாம்பட்டு, வடபொன்பரப்பி, பாக்கம், கடுவனூர் உள்பட 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் தற்போது மடங்கல் பட்டத்தில் சுமார் 400 ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பில் நெல் பயிரிட்டு பராமரித்து வருகின்றனர்.

பயிர்கள் நன்கு செழித்து வளர்ந்து வந்த நிலையில் இலை கருகல் நோயால் பயிர்கள் தற்போது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், பெரும் செலவு செய்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நெற்பயிர் சாகுபடி செய்து பராமரித்து வந்தோம். பயிர்கள் நன்கு வளர்ந்து வந்ததால், இந்தாண்டு அமோக விளைச்சல் கிடைக்கும். இதன் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்த்து இருந்தோம்.

நஷ்டம்

தற்போது கதிர்கள் வரும் நிலையில் இலைகருகல் நோயால் நெற்பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு மருந்துகளை அடித்தும் நோயை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதை தவிர்க்க வேளாண்மைத்துறை அதிகாரிகள், நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களை பார்வையிட்டு எங்களுக்கு உரிய ஆலோசனை வழங்க வேண்டும் என்றனர்.

Next Story