வெளிமாநில பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கு: சஸ்பெண்டு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


வெளிமாநில பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கு: சஸ்பெண்டு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 3 July 2020 8:59 AM IST (Updated: 3 July 2020 8:59 AM IST)
t-max-icont-min-icon

வெளிமாநில பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தொடர்பான வழக்கில் சஸ்பெண்டு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

கள்ளப்பெரம்பூர்,

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே உள்ள பூதலூர் பிரிவு சாலை பகுதி வழியாக கடந்த மாதம் (ஜூன்) ஒரு கார் சென்று கொண்டிருந்தது. அந்த காரில் இருந்து தள்ளி விடப்பட்ட வெளி மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து வல்லம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் வீட்டு வேலைக்காக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து அந்த பெண்ணை அழைத்து வந்த கும்பல் ஒன்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.

வெளி மாநில பெண்கள்

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தஞ்சை மேலவஸ்தாசாவடி தன்ராஜ் ஊர்தியார் நகரை சேர்ந்த செந்தில்குமார் (வயது49), அவருடைய மனைவி ராஜம் (48), தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை அருளானந்த நகரை சேர்ந்த சஸ்பெண்டு செய்யப்பட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகர்(62), தஞ்சையை அடுத்த தண்டாங்கோரை அருகே உள்ள வெளியாத்தூரை சேர்ந்த ராமச்சந்திரன்(40), புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள கல்லுப்பட்டியை சேர்ந்த பழனிவேல் (51) ஆகிய 5 பேரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இவர்கள் புரோக்கர்கள் உதவியுடன் வெளிமாநில பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இந்த நிலையில் கைதான செந்தில்குமார், பிரபாகர், ராமச்சந்திரன் ஆகிய 3 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன், மாவட்ட கலெக்டர் கோவிந்தராவுக்கு பரிந்துரைத்தார்.

குண்டர் சட்டம்

அதன்படி 3 பேர் மீதும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். அதன்பேரில் நேற்று வல்லம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி மற்றும் போலீசார் செந்தில்குமார், பிரபாகர், ராமச்சந்திரன் ஆகிய 3 பேர் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அதற்கான நகலை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 3 பேரிடம் வழங்கினர்.

Next Story