3 மாதங்களை கடந்தும் விட்டபாடில்லை: முடக்கியது கொரோனா; முடங்கியது வாழ்க்கை
3 மாதங்களை கடந்தும் கொரோனா நம்மை விட்டபாடில்லை. இதனால், கொரோனா மனித வாழ்க்கையை முடக்கி போட்டுள்ளது.
திருச்சி,
சீனாவில் கால்பதித்த கொரோனா வைரஸ் மெல்ல, மெல்ல தன் சிறகுகளை விரித்து இன்று உலகம் முழுவதும் பரவி விட்டது. இந்த வைரசை இந்தியாவிற்குள் நுழைய விடாமல் தடுக்க கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி, முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகும் கொரோனாவின் வேகம் அதிகரித்ததே தவிர குறைந்த பாடில்லை. விளைவு, அடுத்தடுத்து 5 ஊரடங்குகள் அமல். அப்படியும் அதன் கோரத்தாண்டவம் நிற்காததால் இம்மாதம் 31-ந் தேதி வரை 6-வது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஒரு நாள், இரண்டு நாள் ஊரடங்குக்கே தாக்கு பிடிக்காத மக்கள் கடந்த 3 மாதத்துக்கும் மேலாக ஊரடங்கால் வீடுகளிலேயே முடங்கி கிடக்கிறார்கள். குடும்பத்தை காப்பாற்ற, குடும்ப தலைவர்கள், குடும்ப தலைவிகள், வாலிபர்கள், வாலிப பெண்கள் வேலைக்கு சென்று வருகிறார்கள். கொரோனா பாதிப்பு அதிகம் இல்லாத மாவட்டங்களில் ஊரடங்கில் இருந்து சில நிபந்தனைகள் மற்றும் தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன.
முழு ஊரடங்கு
இந்தநிலையில், விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் அதிகளவில் வெளியில் வருவதாலும், இறைச்சி கடைகளில் கூட்டமாக நின்று வாங்குவதாலும் கொரோனா தொற்று அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால் தமிழகம் முழுவதும் நேற்று முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதன் காரணமாக அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. வாகனங்கள் ஓடாததால் அனைத்து சாலைகளும் வெறிச்சோடின. மருந்து கடைகள், மருத்துவமனைகள், பால் விற்பனை நிலையம் ஆகியவற்றுக்கு மட்டும் ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. அதனை தவிர்த்து திருச்சியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. முக்கிய பாலங்கள், சாலைகள் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டிருந்தன.
மணப்பாறை-துவாக்குடி
அதேபோல, மணப்பாறையில் நேற்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. ஊரடங்கை மீறி இருசக்கர வாகனங்களில் ஒரு சிலர் சகஜமாக வலம் வந்தனர். அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். ஊரடங்கால் மணப்பாறை பஸ் நிலையம் மற்றும் மருத்துவமனைகள் நிறைந்த மதுரை சாலை மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
திருவெறும்பூர் மற்றும் துவாக்குடி பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. அரசு உத்தரவை மீறி கடைகள் திறக்கப்பட்டுள்ளதா?, வாகனங்களில் யாரும் வலம் வருகிறார்களா? என்று நேற்று அதிகாலை முதலே திருவெறும்பூர் உட்கோட்ட துணை கமிஷனர் சுரேஷ்குமார் தலைமையில் திருவெறும்பூர், துவாக்குடி, நவல்பட்டு, பாய்லர் ஆலை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
சமயபுரம்
சமயபுரத்திலும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. எப்போதும் பரபரப்பாக காணப்படும் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சமயபுரம் சுங்கச் சாவடியில் வாகன போக்குவரத்து இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோல சமயபுரம் கடைவீதி, நால் ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள வர்த்தக நிறுவனங்கள், உணவு விடுதிகள், டீ கடைகள், பெட்டிக் கடைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் என அனைத்தும் மூடப்பட்டிருந்தன.
சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வெளியூரில் இருந்து பக்தர்கள் வருவதை தடுக்கும்பொருட்டு முகப்பு நுழைவு வாயில் பகுதியில் போலீசார் இரும்பு தடுப்புகளை அமைத்து கண்காணித்தனர். மண்ணச்சநல்லூர் மற்றும் திருப்பைஞ்சீலி கடைவீதிகளில் மளிகை கடைகள், நகைக்கடைகள், ஜவுளிக் கடைகள், ஓட்டல்கள் என அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.
லால்குடி-கல்லக்குடி
லால்குடியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. ஊரடங்கை மீறி கடைகளை திறந்து விற்பனை செய்த ஒருசில இறைச்சி கடைகள் மற்றும் பெட்டிக்கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. லால்குடி ரவுண்டானா பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு அங்கு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த ஒருசில வாகனங்களை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் நிறுத்தி விசாரணை நடத்தினார். அப்போது இ-பாஸ் இல்லாமலும், தேவையில்லாமல் வெளியில் வந்தவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. புள்ளம்பாடி பகுதியில் மருந்து கடைகள், பால் விற்பனை நிலையம் தவிர்த்து அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. கல்லக்குடி, புள்ளம்பாடி பேரூராட்சி பகுதிகளில் ஊரடங்கு உத்தரவிற்கு வணிகர்கள், பொதுமக்கள் முழுஒத்துழைப்பு கொடுத்தனர். திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி, அரியலூர் மாவட்ட எல்லையான கல்லகம், புள்ளம்பாடி, திருமழபாடி சாலையில் போலீசார் தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
தொட்டியம்-துறையூர்
இதேபோல தொட்டியம், காட்டுப்புத்தூர், முசிறி, தா.பேட்டை பகுதிகளில் கடைகள் திறக்கப்படாததால் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் முசிறி, தா.பேட்டை பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். முழு ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் வெளியே செல்லாமல் வீடுகளிலேயே முடங்கினர்.
Related Tags :
Next Story