பல்லடம் அருகே வயதான தம்பதியை ஏமாற்றி ரூ.23 ஆயிரம் பறித்து சென்ற மர்மஆசாமிகள்


பல்லடம் அருகே வயதான தம்பதியை ஏமாற்றி ரூ.23 ஆயிரம் பறித்து சென்ற மர்மஆசாமிகள்
x
தினத்தந்தி 7 July 2020 10:10 AM IST (Updated: 7 July 2020 10:10 AM IST)
t-max-icont-min-icon

வயதான தம்பதியை ஏமாற்றி ரூ.23 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் பறித்து சென்றனர்.

பல்லடம், 

பல்லடம் அருகே உள்ள ராயர்பாளையத்தை சேர்ந்தவர் சிதம்பரசாமி(வயது 67). இவரது மனைவி பாக்கியலட்சுமி (62) இவர்கள் தங்கள் வீட்டிலேயே மளிகைக்கடை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சம்பவத்தன்று மோட்டார்சைக்கிளில் வந்த 2 மர்ம ஆசாமிகள் சிதம்பர சாமியின் மளிகை கடைக்குள் புகுந்து நீங்கள் தடைசெய்த புகையிலைப்பொருட்கள் விற்பனை செய்வதாக எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனால் உங்கள் கடை மற்றும் வீட்டை சோதனை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். தாங்கள் சிறப்பு அதிகாரிகள் என்றும் எங்களுடன் சப்-இன்ஸ்பெக்டர் வந்துள்ளார். அவர் ஜீப்பில் அமர்ந்து உள்ளார் எனக்கூறி கடை மற்றும் வீட்டை சோதனை போட்டனர். அப்போது அங்கிருந்த சில புகையிலைப்பொருட்களை காண்பித்து இவையெல்லாம் தடைசெய்யப்பட்ட பொருட்கள் இவைகளை விற்பனை செய்வது குற்றம் என மிரட்டியுள்ளனர்.

இதனால் பயந்துபோன சிதம்பரம் சாமி தம்பதியினர். தெரியாமல் செய்து விட்டோம் இனிமேல் இந்த புகையிலை பொருட்களை விற்க மாட்டோம் எனக்கூறியுள்ளனர். இதையடுத்து புகையிலைபொருட்கள் விற்பனைசெய்வதற்கு ரூ.3 ஆயிரம் அபராதம் என்றும். உங்கள் மீது வழக்குப்பதிவு செய்யாமல் இருப்பதற்காக சப்-இன்ஸ்பெக்டருக்கு ரூ.20 ஆயிரம் தரவேண்டும் என கூறி மிரட்டினர். பயந்துபோன தம்பதியர் இருவரும் தங்களது வீட்டில் இருந்த ரூ.23ஆயிரத்தை கொடுத்துள்ளனர். பணத்தை பெற்றுக்கொண்ட 2 மர்ம ஆசாமிகளும் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றனர். இந்த நூதன மோசடி குறித்து பல்லடம் போலீசார் அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story