2-வது நாளாக பற்றி எரியும் தீயால் பொதுமக்கள் அவதி: பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்


2-வது நாளாக பற்றி எரியும் தீயால் பொதுமக்கள் அவதி: பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
x
தினத்தந்தி 8 July 2020 4:30 AM IST (Updated: 8 July 2020 12:59 AM IST)
t-max-icont-min-icon

நேற்று 2-வது நாளாக பற்றி எரியும் தீயால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். பஞ்சாயத்து அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

நெல்லை, 

நெல்லை ராமையன்பட்டி குப்பை கிடங்கில் நேற்று 2-வது நாளாக பற்றி எரியும் தீயால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். பஞ்சாயத்து அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

நெல்லை ராமையன்பட்டியில் மாநகராட்சி குப்பை கிடங்கு அமைந்துள்ளது. இங்கு மாநகர பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் டிராக்டர், லாரிகள் மூலம் கொண்டு வந்து கொட்டப்படுகிறது. இங்கு தென்மேற்கு பருவ காலத்தில் குப்பையில் தீப்பற்றி எரிவது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் பூங்கா எதிரே உள்ள குப்பை மேட்டில் திடீரென்று தீப்பற்றி எரிந்தது. காற்றின் வேகத்தால் தீயின் வேகமும் அதிகரித்தது.

பாளையங்கோட்டை, கங்கைகொண்டான் மற்றும் பேட்டை தீயணைப்பு நிலை வீரர்கள் அடுத்தடுத்து வாகனங்களில் தண்ணீரை கொண்டு வந்து ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனாலும் தீ கட்டுப்படாமல் நேற்றும் 2-வது நாளாக தொடர்ந்து எரிந்தது. இதனை கட்டுப்படுத்தி, அடுத்த குப்பை மேட்டுக்கு பரவாமலும், முழுமையாக அணைக்கும் பணியிலும் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

இந்த தீ காற்றில் அந்த பகுதி முழுவதும் பரவி புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. நெல்லை-சங்கரன்கோவில் ரோடு புகை மண்டலத்தால் சூழப்பட்டு உள்ளது. இந்த புகை கே.டி.சி. நகர் வரை காற்றில் பரவுகிறது. இதனால் அங்குள்ள மக்களுக்கு கண் எரிச்சல், சுவாச பிரச்சினை மற்றும் தோல் எரிச்சல் ஆகியவை ஏற்பட்டது.

இதை கண்டித்து நேற்று அந்த பகுதி பொது மக்கள் திரண்டனர். மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க நிறுவன தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் ராமையன்பட்டி பஞ்சாயத்து அலுவலகத்துக்கு சென்று முற்றுகையிட்டனர். ராமையன்பட்டி குப்பை கிடங்கில் பற்றி எரியும் தீயை அணைக்க வேண்டும். இனிமேல் அங்கு குப்பை கொட்டாமல் குப்பை கிடங்கை காட்டுப்பகுதியில் உள்ள இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். உடனடியாக அகற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள் பஞ்சாயத்து செயலரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

இந்த போராட்டத்தில் மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் செல்லையா, மானூர் ஒன்றிய செயலாளர் மாசிலாமணி, நாஞ்சான்குளம் சுப்பிரமணியன், வேப்பங்குளம் குமார், மாயாண்டி, பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story