வாணியம்பாடியில் கொரோனா தொற்று தடுப்பு பணிகளை கலெக்டர் சிவன்அருள் நேரில் ஆய்வு
வாணியம்பாடியில் கொரோனா தொற்று தடுப்பு பணிகளை கலெக்டர் சிவன் அருள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வாணியம்பாடி,
வாணியம்பாடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. தொற்று பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்தப் பணிகளை திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன் அருள் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு வந்த கலெக்டர், மருத்துவ அலுவலர் டாக்டர் செல்வகுமார் மற்றும் மருத்துவர்களிடம் கொரோனா தொற்று தடுப்பு பணிகள் குறித்து விவரங்களை கேட்டறிந்தார். கொரோனா தொற்று நோயாளிகளுக்காக தனியாக அமைக்கப்பட்டுள்ள வார்டு பகுதிக்குச் சென்று, அங்கு வேலை பார்க்கும் டாக்டரை அழைத்து, கொரோனா தொற்று தடுப்புப் பணிகள் குறித்தும், நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் கலெக்டர் கேட்டறிந்தார்.
வாணியம்பாடி பஸ் நிலையம் அருகில் அதிகளவில் குப்பைகள் கிடந்ததைப் பார்த்து விட்டு, அதன் அருகில் காரை நிறுத்திய கலெக்டர் நகராட்சி ஆணையாளரை வரவழைத்து குப்பைகளை அகற்றும் படி உத்தரவிட்டு, ஒரு மணிநேரத்துக்கும் மேலாக அங்கேயே கலெக்டர் நின்றார். அப்போது அந்த வழியாக முக் கவசம் அணியாமல் மோட்டார்சைக்கிள்களில் வந்தவர்கள், நடந்து சென்றவர்களை அழைத்து, முகக் கவசத்தை இலவசமாக வழங்கி அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
மேலும் அந்த வழியாக கண்பார்வையற்ற தம்பதியர் நடந்து வந்ததை பார்த்த கலெக்டர், அவர்களிடம் நேரில் சென்று முக் கவசம், கையுறைகளை வழங்கி, கொரோனா நிவாரணமாக ரூ.500-யை தன்னுடைய சொந்த பணத்தில் அவர்களுக்கு வழங்கினார்.
அங்குள்ள ஒரு பெட்ரோல் பங்க் பகுதியில் சுகாதார மற்ற நிலையில் இருந்ததைப் பார்த்த கலெக்டர், பெட்ரோல் பங்க் நிர்வாகியை அழைத்து, இதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு கூறினார். அதைத்தொடர்ந்து கலெக்டர் சிவன்அருள், தனிமைப்படுத்தும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை சம்பந்தப்பட்ட இடங்களுக்கு சென்று, அவர்களுக்கு அளிக்கப்படும் உணவு விவரங்களை கேட்டறிந்தார்.
ஆய்வின்போது வாணியம்பாடி தாசில்தார் சிவப்பிரகாசம், வாணியம்பாடி நகராட்சி ஆணையாளர் பாபு, போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், சுகாதார ஆய்வாளர் சீனிவாசன், அலி உள்பட பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story