புத்தேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் மூலம் 1,119 பேருக்கு ரூ.7¾ கோடி கடன் உதவி தளவாய் சுந்தரம் தகவல்


புத்தேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் மூலம் 1,119 பேருக்கு ரூ.7¾ கோடி கடன் உதவி தளவாய் சுந்தரம் தகவல்
x
தினத்தந்தி 8 July 2020 11:00 PM GMT (Updated: 8 July 2020 9:01 PM GMT)

புத்தேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் மூலம் 1,119 பேருக்கு ரூ.7¾ கோடி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது என்று தளவாய்சுந்தரம் கூறினார்.

நாகர்கோவில்,

புத்தேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் மூலம் 1,119 பேருக்கு ரூ.7¾ கோடி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது என்று தளவாய்சுந்தரம் கூறினார்.

கூட்டுறவு சங்கம்

நாகர்கோவில் புத்தேரி ஊராட்சியில், புத்தேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இங்கு பல்வேறு கடன் உதவியாக ரூ.5.70 லட்சம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இதில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு கடன் தொகையை வழங்கினார். அதன்பிறகு அவர் பேசும் போது கூறியதாவது:-

நடவடிக்கை

தமிழ்நாடு முழுவதும், கூட்டுறவு சங்கங்கள் மூலம், பொதுமக்களுக்கும், மகளிர் சுய உதவிகுழுக்களுக்கும், விவசாயிகளுக்கும் பல்வேறு விதமான கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தற்போது, கொரோனா தொற்று காலமாக இருப்பதால், விவசாயிகள், பொதுமக்கள், மகளிர் சுய உதவிகுழுக்கள் உள்ளிட்ட அனைவரும் பயனடையும் விதமாக, அந்தந்த பகுதியிலுள்ள கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம், பொருளாதார கடன்கள், விவசாயகடன்கள் ஆகியவை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார். குறிப்பாக, சுய உதவி குழுக்களை சார்ந்த உறுப்பினர்கள் மூலம் முககவசங்கள், கை கழுவும் திரவங்களை தயாரித்து, பொதுமக்களுக்கும், பல்வேறு விதமானஅமைப்புகளுக்கும், கொரோனா தொற்று தடுப்புபணியில் பணிபுரிந்து வரும் களப்பணியாளர்களுக்கும் வழங்கி வருகிறார்கள். இதன்மூலம் பயனடைந்த புத்தேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்கள் மற்றும் இப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும், முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.

ரூ.7¾ கோடி கடன் உதவி

குமரி மாவட்டத்தில் புத்தேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் இதில் உள்ள 2783 உறுப்பினர்களில் இதுவரை 1,119 உறுப்பினர்களுக்கு, சுமார் ரூ.7.92 கோடி கடனுதவிகள் கடந்த 5 ஆண்டுகளில் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில், கிஸான் கிரெடிட் கடனாக 11 பேர்களுக்கும், மத்திய கால கடன்களாக 11 பேர்களுக்கும் ரூ.4.45 லட்சமும், ஒரு குழுவுக்கு ரூ.1.25 லட்சமும் ஆக மொத்தம் ரூ.5.70 லட்சம் கடன் உதவியாக வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆவின் தலைவர் எஸ்.ஏ.அசோகன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய பெருந்தலைவர் கிருஷ்ணகுமார், ராஜாக்கமங்கலம் யூனியன் தலைவர் அய்யப்பன், புத்தேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தலைவர் சாம்ராஜ், மாவட்ட கூட்டுறவு நூற்பாலைத்தலைவர் சகாயராஜ், சங்கசெயலாளர் ஓய்.ஜாஸ்மின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story