டாஸ்மாக் கடையில் திருட்டு: போலீசாருக்கு பயந்து சாலையோரம் மதுபாட்டில்கள் வைத்து சென்ற மர்ம நபர்கள்
அஞ்செட்டியில் டாஸ்மாக் கடையில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்களை திருடிய மர்ம நபர்கள் போலீசாருக்கு பயந்து மீண்டும் அதை கொண்டு வந்து சாலையோரம் வைத்து சென்றனர்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. கடந்த 23-ந்தேதி கடையின் மேற்பார்வையாளர் அசோகன் மற்றும் ஊழியர்கள் விற்பனை முடிந்த பின்னர் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டனர். மறுநாள் மேற்பார்வையாளர் கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் ஷட்டர், பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கடைக்குள் சென்று பார்த்த போது, ஒரு லட்சத்து, 13 ஆயிரத்து, 160 ரூபாய் மதிப்பிலான, 16 பெட்டிகளில் இருந்த மதுபாட்டில்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர் அஞ்செட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை திருடிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை டாஸ்மாக் கடை அருகே சாலையோரம் 13 மதுபான பெட்டிகள் வைக்கப்பட்டு இருந்தது. அந்த வழியாக சென்ற அப்பகுதி பொதுமக்கள், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து மதுபான பாட்டில்களுடன் இந்த பெட்டிகளை கைப்பற்றி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை திருடிச்சென்ற மர்ம நபர்கள் 3 பெட்டிகளில் இருந்த மதுவை குடித்துள்ளனர். மீதமுள்ள 13 பெட்டி மதுபாட்டில்களை போலீசாருக்கு பயந்து மீண்டும் கொண்டு வந்து கடை அருகே சாலையோரம் வைத்து சென்றது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை திருடி விட்டு மீண்டும் கொண்டு வந்து வைத்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story