குமாரபாளையம் அருகே அரசு போக்குவரத்து கழக என்ஜினீயர் விபத்தில் பலி


குமாரபாளையம் அருகே அரசு போக்குவரத்து கழக என்ஜினீயர் விபத்தில் பலி
x
தினத்தந்தி 10 July 2020 5:00 AM IST (Updated: 10 July 2020 8:07 AM IST)
t-max-icont-min-icon

குமாரபாளையம் அருகே, அரசு போக்குவரத்து கழக என்ஜினீயர் சாலை விபத்தில் பலியானார்.

குமாரபாளையம், 

ஈரோடு மாவட்டம் கோபி பக்கமுள்ள கொலப்பலூர் பகுதியை சேர்ந்தவர் விஜயராகவன் (வயது 30). என்ஜினீயரான இவர் கோவை மாவட்டம் கருமத்தாம்பட்டியில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனையில் உதவி பொறியாளராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி நிவேதா. இவர் சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியை சேர்ந்தவர்.

இவர்களுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி தற்போது 6 மாதத்தில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. குழந்தை பிறந்தது முதலே நிவேதா தாரமங்கலத்தில் பெற்றோர் வீட்டிலேயே இருந்து வந்தார். விஜயராகவன் அடிக்கடி வந்து மனைவி, குழந்தையை பார்த்துவிட்டு செல்வார். வழக்கம்போல் மனைவி, குழந்தையை பார்க்க வந்த விஜயராகவன் நேற்று முன்தினம் இரவு மாமனார் வீட்டிலேயே தங்கிவிட்டு, நேற்று காலை 6 மணியளவில் மீண்டும் மோட்டார் சைக்கிளில் கோவை புறப்பட்டார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் இவர் சென்று கொண்டிருந்தபோது, சிவசக்தி நகர் பிரிவு அருகே ஒரு லாரி முன்னால் சாலையோரம் நின்று கொண்டிருந்தது. அதன் மீது மோதாமல் இருக்க இவர் மோட்டார் சைக்கிளை வலதுபுறம் திருப்பி உள்ளார். அப்போது எதிரே வந்த ஒரு வாகனம் இவரது மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த விஜயராகவன் நின்று கொண்டிருந்த லாரியின் அடியில் சிக்கி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் குமாரபாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விஜயராகவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விஜயராகவன் இறந்த தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் குமாரபாளையம் ஆஸ்பத்திரிக்கு குவிந்து, அவரது உடலை பார்த்து கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

Next Story