மனைவியின் கள்ளக்காதலனை கொன்ற டீக்கடைக்காரருக்கு ஆயுள் தண்டனை; தேனி கோர்ட்டு தீர்ப்பு


மனைவியின் கள்ளக்காதலனை கொன்ற டீக்கடைக்காரருக்கு ஆயுள் தண்டனை; தேனி கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 9 July 2020 11:48 PM GMT (Updated: 9 July 2020 11:48 PM GMT)

தேவாரம் அருகே மனைவியின் கள்ளக்காதலனை கொலை செய்த டீக்கடைக்காரருக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

தேனி,

தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள கீழசிந்தலைச்சேரி பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் மணிராஜா (வயது 24). ஆட்டோ டிரைவர். அதே ஊரில் உள்ள மேற்குத்தெருவை சேர்ந்தவர் வீரக்குமார் என்ற வீரப்பன் (49). டீக்கடை நடத்தி வந்தார்.

இவருடைய மனைவி கவிதாவுக்கும், மணிராஜாவுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த வீரக்குமார் தனது மனைவியை கண்டித்தார். இதனால், அவர்களுக்கு இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து அவருடைய மனைவி கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

இந்தநிலையில் தனது மனைவி பிரிந்து சென்றதற்கு மணிராஜா தான் காரணம் என வீரக்குமார் கருதினார். இந்தநிலையில் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் 17-ந்தேதி மணிராஜா, கீழசிந்தலைச்சேரியில் இருந்து டி.சிந்தலைச்சேரிக்கு செல்லும் சாலையில் உள்ள குளத்தின் கரையில் சென்று கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு வந்த வீரக்குமார், அவருடைய கண்ணில் மிளகாய் பொடியை தூவி, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக மணிராஜை வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தேவாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரக்குமாரை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை, தேனி மாவட்ட கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல்காதர், குற்றம் சாட்டப்பட்ட வீரக்குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

இதையடுத்து வீரக்குமாரை பாதுகாப்பாக அழைத்து சென்று மதுரை மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பு வக்கீலாக வெள்ளைச்சாமி ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story