கரூர் மாவட்டத்தில் நிதிநிறுவன உரிமையாளர் உள்பட புதிதாக 5 பேருக்கு கொரோனா


கரூர் மாவட்டத்தில் நிதிநிறுவன உரிமையாளர் உள்பட புதிதாக 5 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 10 July 2020 8:19 AM IST (Updated: 10 July 2020 8:19 AM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்டத்தில், நிதிநிறுவன உரிமையாளர் உள்பட புதிதாக 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரூர்,

கரூர் மின்னாம்பள்ளியை சேர்ந்த 48 வயதுடைய ஆண் ஒருவர் கரூரில் சொந்தமாக நிதிநிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு காய்ச்சல் மற்றும் சளி இருந்துள்ளது. இதற்காக அவர் தனியார் மருத்துவமனைக்கு சென்று ஊசிபோட்டுக்கொண்டு வீட்டுக்கு வந்து விட்டார்.

ஆனால், ஊசி போட்டும் காய்ச்சல் சரியாகாமல் இருந்ததுடன், அடிக்கடி உடல்சோர்வும் ஏற்பட்டது. இதையடுத்து அவர் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று கொரோனா பரிசோதனை செய்தபோது, அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து அவர் கொரோனா தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சுகாதாரத்துறையினர் மின்னாம்பள்ளியை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து தடுப்புகள் அமைத்தனர். பின்னர் வாங்கல் ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் பசுபதி தலைமையிலான மருத்துவர்கள், செவிலியர்கள் அங்கு முகாம் அமைத்து, பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், சத்து மாத்திரைகள் வழங்கி, பொதுமக்களிடம் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நிதி நிறுவன உரிமையாளருடன் சேர்த்து, மாயனூர் பகுதியை சேர்ந்த 60 வயது மூதாட்டிக்கும், பழைய டெலிபோன் அலுவலகம் பகுதியை சேர்ந்த 59 வயதுடைய ஆணுக்கும், பள்ளப்பட்டி ஜெ.கே.நகர் பகுதியை சேர்ந்த 41 வயதுடைய ஆணுக்கும், விஸ்வநாதபுரியை சேர்ந்த 35 வயதுடைய வாலிபருக்கும் என மாவட்டத்தில் நேற்று புதிதாக 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கரூர் அரசு மருத்துவமனையில், ஏற்கனவே கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், தென்காசி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 51 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், புதிதாக 5 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 56-ஆக உயர்ந்துள்ளது.

Next Story