டாக்டர், நர்சுக்கு கொரோனா உறுதி: ஆரம்ப சுகாதார நிலையம் மூடல்


டாக்டர், நர்சுக்கு கொரோனா உறுதி: ஆரம்ப சுகாதார நிலையம் மூடல்
x
தினத்தந்தி 10 July 2020 5:25 AM GMT (Updated: 10 July 2020 5:25 AM GMT)

டாக்டர், நர்சுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் அவர்கள் பணியாற்றிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மூடப்பட்டது.

சாத்தூர்,

சாத்தூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் மகப்பேறு டாக்டர் மற்றும் நர்சுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் 2 பேரும் சாத்தூர் அரசு மருத்துவமனையில் உள்ள அரசு அலுவலர்களுக்கான சிறப்பு பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் பணிபுரிந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்தினர். மேலும் ஆரம்ப சுகாதார நிலையத்தை நகராட்சி அதிகாரிகள் மூடி சீல் வைத்தனர்.

மேலும் அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றிய நர்சுகள் மற்றும் மகப்பேறு சிகிச்சை பெற்று வந்த பெண்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது.

சாத்தூர் அருகே உள்ள படந்தால் பஞ்சாயத்திற்கு உட்பட்ட தென்றல் நகரில் வசித்து வரும் முதியவர் ஒருவர் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து இறந்தவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வலியுறுத்தப்பட்டது.

இதனால் இறந்த முதியவரின் 5 மகன்கள் உள்பட 19 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு ஒரே வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டனர். மேலும் அந்த பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டது மேலும் கிருமிநாசினி தெளித்து அந்த பகுதி முழுவதும் தூய்மைப்படுத்தப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போக்குவரத்து காவல் நிலையத்தில் பணிபுரியும் 34 வயதுடைய போக்குவரத்து காவலர் ஒருவருக்கும், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 29 வயது தனியார் வங்கி ஊழியர் ஒருவருக்கும் நேற்று தொற்று உறுதியாகி உள்ளது இதனை தொடர்ந்து போக்குவரத்து போலீஸ்காரர் மற்றும் வங்கி ஊழியர் ஆகியோர் குடியிருக்கும் வீடு அமைந்துள்ள பகுதியில் அந்தந்த பகுதி சுகாதாரத்துறையினர் கிருமிநாசினிகளை தெளித்து நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்தநிலையில் ஏற்கனவே ஒரு போக்குவரத்து போலீஸ்காரருக்கு நோய்த்தொற்று உறுதியாகி சிகிச்சை மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது மற்றொருவருக்கும் தொற்று உறுதியாகி உள்ளதால் நேற்று மாலை முதல் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீஸ் நிலைய வளாகத்தில் உள்ள போக்குவரத்து காவல் நிலையம் மூடப்பட்டது

ஏற்கனவே ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நத்தம்பட்டி போலீஸ் நிலையம், மம்சாபுரம் போலீஸ் நிலையம், ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலையம், சிவகாசி நகர் போலீஸ் நிலையம் மூடப்பட்ட நிலையில் தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர் போக்குவரத்து காவல் நிலையம் மூடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மூடப்பட்ட காவல் நிலையங்களின் எண்ணிக்கை மாவட்டத்தில் 5 ஆக உயர்ந்துள்ளது.

Next Story