பெண்ணுடன் இருக்கும் ஆபாச வீடியோவை வெளியிட்ட பனியன் நிறுவன மேலாளர் கைது


பெண்ணுடன் இருக்கும் ஆபாச வீடியோவை வெளியிட்ட பனியன் நிறுவன மேலாளர் கைது
x
தினத்தந்தி 10 July 2020 10:43 PM GMT (Updated: 10 July 2020 10:43 PM GMT)

திருப்பூரில் திருமணத்தை நிறுத்துவதற்காக பெண்ணுடன் இருக்கும் ஆபாச வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்ட பனியன் நிறுவன மேலாளரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது-

திருப்பூர்,

ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்தவர் மாது(வயது 41). இவர் திருப்பூர் திருநீலகண்டபுரத்தில் தங்கியிருந்து ஒரு பனியன் நிறுவனத்தில் ஆடை தயாரிப்பு மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். மாதுவுக்கு திருமணமாகி விட்டது. தனது குடும்பத்தை சென்னிமலையில் விட்டு விட்டு அவர் மட்டும் திருப்பூரில் அறை எடுத்து தனியாக இருந்துள்ளார்.

இந்தநிலையில் 24 வயது இளம்பெண்ணுடன் மாதுவுக்கு கடந்த 2 ஆண்டுகளாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. மாது தனக்கு திருமணம் ஆகவில்லை என்று கூறி அந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்தநிலையில் அந்த பெண்ணுடன் தனிமையில் இருப்பதை அந்த பெண்ணுக்கு தெரியாமல் மாது வீடியோவாக பதிவு செய்ததாக தெரிகிறது.

அதன்பின்னர் அந்த வீடியோவை அந்த பெண்ணிடம் காட்டி கடந்த 2 ஆண்டுகளாக மாது தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாதுவின் வீட்டுக்கு தெரியவர அதன்பிறகு அவரது வீட்டினர் திருப்பூர் வந்து அந்த பெண்ணை கண்டித்துள்ளனர். இதைத்தொடர்ந்து அந்த பெண் மாதுவுடன் பேசுவதை தவிர்த்துள்ளார். அதன்பிறகு மாது கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சென்னிமலைக்கு சென்று விட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் அந்த பெண்ணின் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்வற்கான ஏற்பாடுகளை செய்தனர். இன்னும் ஒருவாரத்தில் அந்த பெண்ணுக்கு திருமணம் நடக்க உள்ளது. இதை அறிந்த மாது, அந்த பெண்ணை தொடர்பு கொண்டு யாரையும் திருமணம் செய்யக்கூடாது என்றும், இல்லாவிட்டால் இருவரும் தனிமையில் இருக்கும் ஆபாச வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதாக மிரட்டியுள்ளார்.

இதைத்தொடர்ந்து மாது அந்த பெண்ணுடன் தனிமையில் இருக்கும் ஆபாச வீடியோவை சமூகவலைத்தளத்தில் பதிவேற்றம் செய்ததுடன், அந்த வீடியோவை அந்த பெண்ணை திருமணம் செய்ய இருந்த வாலிபருக்கும் அனுப்பி வைத்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த வாலிபர், அந்த இளம்பெண்ணின் குடும்பத்தினரிடம் விவரம் தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து அந்த பெண் திருப்பூர் வடக்கு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுராதா, சப்-இன்ஸ்பெக்டர் கலாவதி ஆகியோர் மாதுவை பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் மாதுவிடம் இருந்து ஆபாச வீடியோக்களை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து மாது மீது, தனக்கு திருமணம் ஆனதை மறைத்து அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்து மோசடி செய்தது, ஆபாச வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்த குற்றத்துக்காக வழக்குப்பதிவு செய்து அவரை நேற்று போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் திருப்பூரில் பெரும்பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Next Story