சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் 1,000 ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து துறைகளை சேர்ந்த 1,000 ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
சேலம்,
2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து துறைகளை சேர்ந்த 1,000 ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
கொரோனா நோய்
சேலம் மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளில் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இருந்தபோதிலும் கொரோனா நோய்த்தொற்று கட்டுப்படுத்த முடியவில்லை. தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், சேலம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகத்தில் பணிபுரியும் 2 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கலெக்டர் உத்தரவு
இதனிடையே, பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகம் உடனடியாக பூட்டப்பட்டு அந்த பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சேலம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அனைத்து துறை அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும், அவ்வாறு பரிசோதனை செய்யும் நபர்களின் பெயர், எந்த துறையை சேர்ந்தவர்கள், பரிசோதனை செய்த விவரம், தேதி போன்றவற்றை மாவட்ட நிர்வாகத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றும் மாவட்ட கலெக்டர் ராமன் உத்தரவிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில், சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வழக்கம்போல் அதிகாரிகள், ஊழியர்கள் பணிக்கு வந்தனர். பின்னர் அவர்களுக்கு அலுவலக வளாகத்தில் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்ப நிலையை கண்டறியும் பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலகம், முதன்மை கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள், அலுவலர்கள் அனைவரும் நேற்று பழைய நாட்டாண்மை கட்டிடத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்திற்கு சென்றனர்.
1,000 பேருக்கு பரிசோதனை
பின்னர் அவர்கள் சமூக இடைவெளியுடன் நின்று ஒவ்வொருவரும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். அப்போது அங்கிருந்த சுகாதாரத்துறை ஊழியர்கள் அவர்களுக்கு சளி மாதிரி எடுத்து ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். கல்வித்துறை ஊழியர்களை தொடர்ந்து மற்ற துறைகளை சேர்ந்த ஊழியர்களும் அங்கு சென்றனர். கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். இதனால் அந்த பகுதியில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு துறைகளை சேர்ந்த 600 பேருக்கு நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து நேற்று 2-வது நாளாக 400 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாகவும், இதுவரை சுமார் 1,000 ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களுக்கு நோய் தொற்று உள்ளதா? இல்லையா? என்பது பரிசோதனை முடிவில் தெரியவரும் என கூறப்படுகிறது.
Related Tags :
Next Story