சிவகாசியில் அறிவிக்கப்படாத ஊரடங்கு; சாலைகள் தடுப்புகளால் அடைப்பு


சிவகாசியில் அறிவிக்கப்படாத ஊரடங்கு; சாலைகள் தடுப்புகளால் அடைப்பு
x
தினத்தந்தி 11 July 2020 5:05 AM GMT (Updated: 11 July 2020 5:05 AM GMT)

சிவகாசியில் அறிவிக்கப்படாத ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு சாலைகள் தடுப்புகளால் அடைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

சிவகாசி,

விருதுநகர் மாவட்டத்தில் தொழில் நகரமான சிவகாசியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மத்தியில் ஒருவித அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சிவகாசியில் உள்ள வர்த்தக சங்கம் காலை 6 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டும் கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெறும் என்று அறிவித்து, அதை கடந்த 3 நாட்களாக செயல்படுத்தி வருகிறது.

இதேபோல் பட்டாசு தொழிலாளர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படாமல் இருக்க நேற்று முதல் வருகிற 19-ந்தேதி வரை பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளன. இதேபோல் பட்டாசு கடைகளுக்கும் 11 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் தற்போது சிவகாசி நகர பகுதியில் பொதுமக்களின் நடமாட்டம் மதியம் முதல் அடுத்தநாள் காலையில் வரை முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சிவகாசியின் மையப்பகுதியான ரதவீதியில் முக்கிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் உள்ளன. இந்தபகுதியில் உள்ள கடைகளை திறந்து விற்பனை செய்ய மாவட்டநிர்வாகம் அனுமதி வழங்கி இருக்கிறது. ஆனால் அந்த பகுதிக்கு செல்லும் சாலைகள் தடுப்புகளால் வைத்து அடைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ரதவீதி பகுதிக்கு செல்ல முயலும் வாகன ஓட்டிகள் நீண்டதூரம் அலைக்கழிக்கப்படுகிறார்கள். இது அறிவிக்கப்படாத ஊரடங்காக தெரிகிறது.

இதைதவிர்த்து விட்டு சிவகாசி நகர பகுதிக்கு மட்டுமாவது ஊரடங்கு அறிவித்தால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேவராமல் இருப்பார்கள். நோய் தொற்றையும் குறைக்கலாம். பொதுமக்கள் வெளியே வரவும், கடைகள் திறக்கவும் அனுமதி அளித்து விட்டு சாலைகளை தடுப்புகளை வைத்து அடைத்து சீல் வைப்பதால் யாருக்கு என்ன லாபம். எனவே மாவட்ட நிர்வாகம் சிவகாசி ரதவீதிகளில் வைக்கப்பட்டுள்ள தடுப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் நகர் பகுதிக்கு ஊரடங்கை   அறிவிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story