வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒரே நாளில் 254 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,574 ஆக உயர்வு
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒரே நாளில் 254 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
வேலூர்,
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒரே நாளில் 254 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன் மூலம் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 7,574 ஆக உயர்ந்தது.
ரேஷன் கடை ஊழியர்கள்
வேலூர் மாநகராட்சி பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூர் ரங்காபுரத்தில் மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது. இதில், 150-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு சளி மாதிரி சேகரிக்கப்பட்டன. அதன் பரிசோதனை முடிவுகள் நேற்று வந்தன. இதில், 40-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டன.
அதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக தனியார், அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
அதைத்தொடர்ந்து அதிகாரிகள் அறிவுறுத்தலின் பேரில் நேற்றும், இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகள் அனைத்தையும் மூடப்படுகின்றன.
134 பேருக்கு கொரோனா
வேலூர் தொரப்பாடியில் சிறைத்துறை பயிற்சி மையம் மற்றும் குடியிருப்பு வளாகம் அமைந்துள்ளது. இந்த பயிற்சி மையத்தில் பணிபுரிந்து வரும் பெண் பேராசிரியரின் கணவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதே போன்று சத்துவாச்சாரி பகுதி 1-ல் 2 வயதுடைய ஆண், பெண் இரட்டை குழந்தைகள், விரிஞ்சிபுரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர், அலமேலுமங்காபுரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர், ஓல்டு டவுனில் 85 வயது முதியவர், வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் பணிபுரிந்த நர்சுகள், ஊழியர்கள் உள்பட மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 134 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது.
கொரோனாவினால் பாதிக்கப்பட்ட 134 பேரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,747 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று 12 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 388 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் நேற்று 22 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் அரக்கோணம், ஆற்காடு, காவேரிப்பாக்கம், நெமிலி, சோளிங்கர், திமிரி, வாலாஜா, ராணிப்பேட்டை பகுதிகளை சேர்ந்த மொத்தம் 44 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,515 ஆக உயர்ந்துள்ளது. இதில் மொத்தம் 777 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 16 ஆயிரத்து 297 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அதில் 1,727 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 1,856 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 5 குழந்தைகள் உள்பட 64 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக தனியார், அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,924 ஆக உயர்ந்துள்ளது.
Related Tags :
Next Story