ராமநாதபுரம், சிவகங்கையில் 5 பேர் பலி; 119 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


ராமநாதபுரம், சிவகங்கையில் 5 பேர் பலி; 119 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 12 July 2020 9:45 AM IST (Updated: 12 July 2020 9:45 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் 119 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 5 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,692 ஆக இருந்தது. இந்த நிலையில் ராமநாதபுரம் சுற்றுவட்டார பகுதியில் 32 பேருக்கும், பரமக்குடி சுற்றுவட்டார பகுதியில் 9 பேருக்கும், நயினார் கோவில் சுற்று வட்டார பகுதியில் 6 பேருக்கும், கமுதி சுற்றுவட்டார பகுதியில் 4 பேர் உள்பட 70 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதன்மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,762 ஆக உயர்ந்தது. நேற்று முன் தினம் எடுக்கப்பட்ட பரிசோதனையில் ராமநாதபுரம் மற்றும் பரமக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஏர்வாடி அருகே உள்ள மேலமடை பகுதியை சேர்ந்த 54 வயது நபர் மற்றும் விருதுநகர் கட்டபொம்பன் தெருவை சேர்ந்த 59 வயது நபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இதன்மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.

இதேபோல் சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி பகுதியில் 9 பெண்கள், 13 ஆண்கள், ஒக்கூரில் ஒரு ஆண், நாலுகோட்டையில் ஒரு பெண், அம்மன்பட்டியில் ஒரு ஆண், சிவகங்கையில் 9 பெண்கள், 3 ஆண்கள், திருப்பத்தூரில் 2 பெண்கள், ஒரு ஆண், காளையார் கோவிலில் ஒரு ஆண், அழகாபுரியில் ஒரு பெண், தேவகோட்டையில் ஒரு ஆண், மானாமதுரையில் ஒரு ஆண், சாத்தரசன்கோட்டையில் 2 ஆண்கள், பிரவலூரில் ஒரு பெண், திருப்புவனத்தில் ஒரு ஆண், லாடனேந்தலில் ஒரு ஆண் உள்பட 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மேலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட திருப்பத்தூரை சேர்ந்த 65 வயது முதியவரை சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்தபோது வழியிலேயே உயிரிழந்தார். இதேபோல் காளையார் கோவிலை அடுத்த மறவமங்கலத்தை சேர்ந்த 78 வயது முதியவர், தேவகோட்டையை சேர்ந்த 68 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Next Story