மதுரையை மிஞ்சிய விருதுநகர்:ஒரே நாளில் 300 பேருக்கு கொரோனா


மதுரையை மிஞ்சிய விருதுநகர்:ஒரே நாளில் 300 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 12 July 2020 10:25 AM IST (Updated: 12 July 2020 10:25 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 300 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில் மாவட்டத்தின் பாதிப்பு எண்ணிக்கை 2,207 ஆக உயர்ந்துள்ளது.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 27,839 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 1907 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆனது. 3795 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. இதுவரை 784 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 10 சிறப்பு தனிமைப்படுத்தும் மையங்களில் 352 பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 300 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. சிவகாசி பகுதியில் மாரனேரி, செங்கமலநாச்சியார்புரம், சேர்வைக்காரன்பட்டி, மருதுபாண்டியர் மேட்டுதெரு, நேஷனல் காலனி, முத்துமாரிநகர், முஸ்லிம் வடக்கு தெரு, பி.கே.எஸ்.தெரு, காளஸ்வரி காம்பவுண்டு, காமராஜர்புரம் காலனி, சிவகாசி டவுன் போலீஸ் நிலையம், சிவானந்தம் நகர், தென்றல்நகர், எம்.பி.எஸ்.எஸ்.நடராஜன்நகர், இந்திராநகர், பிள்ளையார்கோவில் தெரு, முருகன் காலனி, ஈஸ்வரன் காலனி, அரிசிகோபுரம் தெரு, அய்யனார்காலனி, சாமிபுரம் காலனி, வடபட்டி, மாதாங்கோவில்பட்டி, ராஜதுரைநகர், பாரதிநகர், பி.எஸ்.கே.நகர் கிழக்கு, காமராஜர் நகர், அண்ணா காலனி, சாட்சியாபுரம், பராசக்தி காலனி, திருத்தங்கல், புதுத்தெரு, சிவானந்தாகாலனி, பள்ளபட்டி, அம்மன்கோவில்பட்டி, நடராஜபுரம் ஆகிய பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ராஜபாளையம் நகர் பகுதி, சுந்தரநாச்சியார்புரம், வேலாயுதபுரம், சேத்தூர், தளவாய்புரம், சமுசிகாபுரம், நாச்சியார்பட்டி, செட்டியார்பட்டி, முதுக்குடி, கோவிலூர் ஆகிய பகுதிகளில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணாபுரம், மம்சாபுரம், ஆண்டாள்புரம், சத்திரப்பட்டி, களங்காப்பேரி, பிள்ளையார்நத்தம், முத்துச்சாமிபுரம், வத்திராயிருப்பு, வைத்திலிங்காபுரம் ஆகிய பகுதிகளில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றும் 40,28, 25, 24 வயதுடைய 4 செவிலியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் பாலையம்பட்டி, சின்னபுளியம்பட்டி, சொக்கலிங்காபுரம் ஆத்திப்பட்டி, நரிக்குடி, பந்தல்குடி, திருச்சுழி, வீரசோழன் ஆகிய பகுதிகளிலும் பாதிப்பு உள்ளது. சாத்தூர் படந்தால் பகுதியிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று பாதிப்பு ஏற்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் சிவகாசி, ராஜபாளையம், அருப்புக்கோட்டை, விருதுநகர் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர்.

இதன் மூலம் இம்மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 2,207 ஆக உயர்ந்துள்ளது. மேலும் விருதுநகர் பாண்டியநகரை சேர்ந்த 77 வயது முதியவர் கொரோனா பாதிப்பால் மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்தநிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

மாவட்ட நிர்வாகம் நோய் கட்டுப்பாட்டு பகுதி என 57 பகுதிகளை அறிவித்த போதிலும் மாவட்டம் முழுவதும் பரவலாகவே நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. மாவட்டம் முழுவதுமே தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டியது அவசியம் ஆகும். குறிப்பாக கிராமப்பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்தி நோய் பாதிப்பை கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டியது அவசியம் ஆகும்.

மதுரையில் நேற்று கொரோனாவில் 277 பேர் பாதிக்கப்பட்டனர். ஆனால் விருதுநகர் மாவட்டத்தில் 300 பேர் பாதிக்கப்பட்டதால் மதுரையை விட விருதுநகரில் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. மதுரையில் தொற்று அதிகரித்து முழு ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், அருகில் உள்ள மாவட்டமான விருதுநகரில் அதை விட எண்ணிக்கை உயர்ந்து வருவது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story