ஆம்பூரில் பரபரப்பு: இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்ததால் வாலிபர் தீக்குளிப்பு


ஆம்பூரில் பரபரப்பு: இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்ததால் வாலிபர் தீக்குளிப்பு
x
தினத்தந்தி 13 July 2020 9:31 AM IST (Updated: 13 July 2020 9:31 AM IST)
t-max-icont-min-icon

ஆம்பூரில், இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்ததால், வாலிபர் போலீசார் முன்னிலையில் திடீரென தீக்குளித்துள்ளார்.

ஆம்பூர்,

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த தனியார் தொழிற்சாலை தொழிலாளி முகிலன் (வயது 27). இவர் நேற்று வீட்டில் இருந்து ஆம்பூர் பஸ் நிலையம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றார். ஆம்பூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதி அருகே போலீசார் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த முகிலனை போலீசார் தடுத்து நிறுத்தி, பொது முடக்கத்தின்போது வெளியில் ஏன் சுற்றித் திரிகிறீர்கள் எனக் கேட்டு அவருடைய வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தன்னுடைய இருசக்கர வாகனத்தை திருப்பி தருமாறு போலீசாரிடம் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் போலீசார் வாகனத்தை திருப்பி தர மறுத்துவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த வாலிபர் உடலில் மண்எண்ணெய் ஊற்றிக் கொண்டு வந்த அவர் போலீசார் முன்னிலையில் திடீரென தீக்குளித்துள்ளார். மேலும் உடலில் தீப்பிடித்து எரிந்த நிலையில் போலீசாரை நோக்கி ஓடிச் சென்றார். அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய அவரை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் சி.எம்.சி. மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story