உடுமலையில் தீயணைப்பு படை வீரருக்கு கொரோனா


உடுமலையில் தீயணைப்பு படை வீரருக்கு கொரோனா
x
தினத்தந்தி 13 July 2020 11:12 PM GMT (Updated: 13 July 2020 11:12 PM GMT)

உடுமலை தீயணைப்பு படை வீரருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் குடியிருப்பு பகுதி அடைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டது. அவர் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

உடுமலை,

உடுமலை தீயணைப்பு நிலையத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு 45 வயதுடையவர் தீயணைப்பு படைவீரராக பணியாற்றி வந்தார். அவர் உடுமலை தீயணைப்பு நிலைய வளாகத்தில் பின்புறம் உள்ள தீயணைப்பு படை வீரர்களுக்கான குடியிருப்பில் குடியிருந்து வருகிறார்.

அவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருப்பூருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதன் பின்னர் கடந்த சுமார் 8 மாதங்களுக்கு முன்பு பொள்ளாச்சி தீயணைப்பு நிலையத்திற்கு மாற்றப்பட்டார். அவர் வெளியூருக்கு மாற்றப்பட்ட நிலையிலும் அவர் குடும்பத்துடன் உடுமலை தீயணைப்புப்படை வீரர்கள் குடியிருப்பில் குடியிருந்து வருகிறார்.

இவர் உடுமலையில் இருந்து பொள்ளாச்சிக்கு பணிக்கு சென்று வந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் அவருக்கு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கடந்த 7-ந்தேதி சளி மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதற்கிடையில் பொள்ளாச்சியில் இருந்து உடுமலைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டிருந்த அவர் நேற்று முன்தினம் பொள்ளாச்சி தீயணைப்பு நிலையத்தில் இருந்து விடுவிப்பு உத்தரவுப்பெற்றுக்கொண்டு, பொள்ளாச்சியில் இருந்து மோட்டார் சைக்கிளில் உடுமலை தீயணைப்பு நிலைய வளாகத்தில் உள்ள தீயணைப்பு படை வீரர்களுக்கான குடியிருப்பில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார்.

பின்னர் நேற்று அவர் உடுமலை தீயணைப்பு நிலையத்தில் பணியில் சேர்ந்துள்ளார். உடனே உடுமலை தீயணைப்பு நிலைய அலுவலர் ஹரிராமகிருஷ்ணன், அந்த வீரரிடம் உடுமலை அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்து வரும்படி அறிவுறுத்தியுள்ளார்.

அதன்பேரில் அந்த வீரர் உடுமலை அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.அங்கு அவருக்கு சளி மாதிரி சேகரிக்கப்பட்டது. அதன்பின்னர் அவர் அங்கிருந்து திரும்பினார்.

இந்த நிலையில் அவருக்கு பொள்ளாச்சியில் சளிமாதிரி எடுத்து அனுப்பப்பட்டிருந்த பரிசோதனை முடிவு நேற்று வந்தது. அதில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து உடுமலை நகர அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் எஸ்.கவுதம், நகராட்சி நகர்நல அலுவலர்(பொறுப்பு) ஆர்.செல்வம்,சுகாதார துறை மற்றும் நகராட்சி பணியாளர்கள் அந்த குடியிருப்பு பகுதிக்கு சென்றனர்.

அந்த குடியிருப்பு பகுதி மற்றும் தீயணைப்பு நிலையம் ஆகிய இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு,பிளச்சிங் பவுடர் தூவப்பட்டது. தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.இதைத்தொடர்ந்து குடியிருப்பு பகுதி தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டது.

அந்த குடியிருப்பில் தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றும் 18 வீரர்கள் குடும்பத்துடன் உள்ளனர்.கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட தீயணைப்பு படைவீரர் நேற்று மாலை தனி ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார்.அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதைத்தொடர்ந்து அவரது மனைவி (வயது 40), மகன்(வயது10)ஆகியோருக்கும் சளி மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது.

Next Story