திருவாரூரில் பருத்தியை கொள்முதல் செய்யாததால் விவசாயிகள் சாலைமறியல்


திருவாரூரில் பருத்தியை கொள்முதல் செய்யாததால் விவசாயிகள் சாலைமறியல்
x
தினத்தந்தி 14 July 2020 7:17 AM IST (Updated: 14 July 2020 7:17 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தியை கொள்முதல் செய்யாததால் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருவாரூர்-நாகை சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். தற்போது பருத்தி அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அறுவடை செய்த பருத்தியை ஒழுங்குமுறை விற்பனை கூடம் மற்றும் தனியாரிடம் விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.

கடந்த 3 மாதங்களாக கொரோனா ஊரடங்கு காரணமாக தனியார் மில்கள் சரிவர இயங்கவில்லை. மேலும் ஏற்றுமதியும் நடைபெறாததால் பருத்திக்கு இந்த ஆண்டு உரிய விலை கிடைக்கவில்லை. இதனால் இந்திய பருத்தி கழகம் மூலம் மத்திய அரசு நிர்ணயம் செய்த விலையில் முழுமையாக கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். வெளி சந்தையை விட ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஓரளவு விலை கிடைத்து வருவதால் பெரும்பாலான விவசாயிகள் தங்களது பருத்தியை ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் விற்பனை செய்து வருகின்றனர்.

இதனால் ஏலம் நடைபெறுதற்கு 4 நாட்கள் முன்பாகவே பருத்தியை வாகனங்களில் ஏற்றி ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வருகின்றனர். கடந்த வாரம் ஏலம் விடப்பட்ட பருத்திகளை ஏற்றி செல்வதில் காலதாமதம் ஏற்பட்டதால் ஒழுங்குமுறை விற்பனை கூட கதவு பூட்டப்பட்டது. இதனால் கொள்முதல் செய்யாததால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் நேற்று திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது பருத்திக்கு உரிய விலை வழங்குவதுடன், இந்திய பருத்தி கழகம் மூலம் முழுமையாக கொள்முதல் செய்ய வேண்டும். டோக்கன் டிப்படையில் பருத்தி வாகனங்களை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்குள் கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

தகவல் அறிந்த திருவாரூர் தாசில்தார் நக்கீரன், துணை போலீஸ் சூப்பிரண்டு தினேஷ்குமார், ஒழுங்குமுறை விற்பனை கூட சூப்பிரண்டு செந்தில்முருகன் மற்றும் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் விவசாயிகளிடம் டோக்கன் அடிப்படையில் பருத்தியை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது.

இதனையடுத்து சாலைமறியலை கைவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் திருவாரூர்-நாகை தேசிய நெடுஞ்சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் டோக்கன் அடிப்படையில் வாகனங்கள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு அனுமதிக்கப்பட்டன.

Next Story