பாம்பனில் புதிய ரெயில் பாலம் கட்டும் பணி: கடலுக்குள் விழுந்த கருவியை எடுக்க மூழ்கியவர் மூச்சுத்திணறி பலி


பாம்பனில் புதிய ரெயில் பாலம் கட்டும் பணி: கடலுக்குள் விழுந்த கருவியை எடுக்க மூழ்கியவர் மூச்சுத்திணறி பலி
x
தினத்தந்தி 14 July 2020 12:25 PM IST (Updated: 14 July 2020 12:25 PM IST)
t-max-icont-min-icon

பாம்பனில் புதிய ரெயில் பாலம் கட்டும் பணியின்போது கடலுக்குள் விழுந்த கருவியை எடுக்கச் சென்ற சங்கு குளிக்கும் தொழிலாளி மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தார்.

ராமேசுவரம்,

ராமேசுவரத்தை அடுத்துள்ள பாம்பனில் மத்திய அரசு சார்பில் ரூ.250 கோடி செலவில் புதிதாக ரெயில் பாலம் கட்டப்பட்டு வருகிறது. ஏற்கனவே உள்ள பாலத்துக்கு 50 மீட்டருக்கு அருகில் இந்த புதிய பாலம் கட்டும் பணி கடந்த 3 மாதமாக நடைபெற்று வருகிறது. இதற்காக தூண் அமைக்கும் பணி நடைபெற்ற போது அதன் கருவி ஒன்று கடலுக்குள் விழுந்துவிட்டது. இதனை பணியாளர்கள் எடுக்க முயன்றும் முடியவில்லையாம்.

இதையடுத்து தூத்துக்குடியில் இருந்து சங்கு குளிக்கும் தொழிலாளி 3 பேரை வரவழைத்து அவர்கள் மூலம் அந்த கருவியை எடுக்க முயன்றனர். நேற்று மதியம் தூத்துக்குடி சவேரியார்புரத்தை சேர்ந்த சகாயஊர்சோன் (வயது 50) என்பவர் கடலுக்குள் குதித்து கருவியை தேடும் பணியில் ஈடுபட்டார்.

அப்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து சக தொழிலாளர்கள் அவரை மேலே தூக்கினர். பின்பு உயிருக்கு போராடிய அவரை ராமேசுவரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து ராமேசுவரம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story