அங்கன்வாடி கட்டிட பிரச்சினை: இரு கிராமத்தினர் ,கலெக்டர் அலுவலகத்தில் மனு


அங்கன்வாடி கட்டிட பிரச்சினை: இரு கிராமத்தினர் ,கலெக்டர் அலுவலகத்தில் மனு
x
தினத்தந்தி 14 July 2020 1:36 PM IST (Updated: 14 July 2020 1:36 PM IST)
t-max-icont-min-icon

அங்கன்வாடி கட்டிட பிரச்சினை தொடர்பாக இரு கிராமமக்கள் நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

நாமக்கல்,

புதுச்சத்திரம் ஒன்றியம் தொட்டியபாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகம் வந்து மனுக்கள் போடும் பெட்டியில் கோரிக்கை மனு ஒன்றை போட்டு சென்றனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

தொட்டியபாளையத்தில் கடந்த 2015-16-ம் ஆண்டில் சத்துணவு மையம் ஒன்று கட்டப்பட்டது. இந்த அங்கன்வாடி மையம் குடித்தெரு மாரியம்மன் கோவில் அருகில் அமைந்துள்ளது. தாழ்த்தப்பட்ட மக்களின் குழந்தைகள் சத்துணவு மையத்திற்கு வரக்கூடாது என கூறி சிலர், சத்துணவு மையத்தை திறக்கவிடாமல் தடுத்து வருகின்றனர். இதனால் அந்த குழந்தைகள் கல்வி கற்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

எனவே அங்கன்வாடி மையத்தை திறக்க உத்தரவிட வேண்டும். மேலும் சட்ட விரோதமாக அங்கன்வாடி மைய கட்டிடத்தினை திறக்க இடையூறு செய்யும் நபர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தனர்.

எருமப்பட்டி அருகே அலங்காநத்தம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மனுக்கள் போடும் பெட்டியில் போட்டு சென்ற மனுவில் கூறியிருப்பதாவது:-

அலங்காநத்தம் இந்திரா காலனியில் சுமார் 120 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் கிராமத்தின் குடிநீர் தேவைக்காக கடந்த 1984-ம் ஆண்டு மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டது. தற்போது அதில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் அந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டி, சிதிலமடைந்து எப்போது இடிந்து விழுமோ என்று அச்சப்படும் நிலையில் உள்ளது.

தற்போது சிதிலம் அடைந்துள்ள நீர்தேக்க தொட்டியின் அருகே 15-வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி முகமையின் சார்பில் அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு பூமிபூஜை போடப்பட்டுள்ளது. அந்த இடம் அங்கன்வாடி அமைய பொருத்தமான இடம் இல்லை. அங்கு அங்கன்வாடி மையம் கட்டினால் குழந்தைகளுக்கு போதுமான பாதுகாப்பு இருக்காது. ஊராட்சியில் உள்ள புறம்போக்கு நிலத்தில் அங்கன்வாடி மைய கட்டிடத்தை கட்டினால் பயன் ஏற்படும். எனவே தாங்கள் நேரில் பார்வையிட்டு உரிய அலுவலர்களுக்கு ஆணை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.

Next Story