சேலத்தில் 3-வது நாளாக கலெக்டர் அலுவலக ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை


சேலத்தில் 3-வது நாளாக கலெக்டர் அலுவலக ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 14 July 2020 2:07 PM IST (Updated: 14 July 2020 2:07 PM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் 3-வது நாளாக கலெக்டர் அலுவலக ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

சேலம்,

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகத்தில் பணிபுரியும் 2 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று கலெக்டர் ராமன் உத்தரவிட்டார்.

அதன்படி கடந்த 10-ந் தேதி மற்றும் 11-ந் தேதிகளில் சேலம் பழைய நாட்டாண்மை கட்டிடத்தில் உள்ள மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்துக்கு சென்று ஊழியர்கள் கொரோனா பரிசோதனை செய்தனர். ஏற்கனவே கல்வித்துறை, ஊரக வளர்ச்சி முகமை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள், ஊழியர்கள் தாங்களாகவே முன்வந்து கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர்.

மேலும், கடந்த 2 நாட்களாக கலெக்டர் அலுவலகம் பூட்டப்பட்டு அனைத்து அலுவலகங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற வில்லை. இந்த நிலையில், நேற்று 3-வது நாளாக கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள், அலுவலர்கள் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்துக்கு வந்து கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். அப்போது ஒரே நேரத்தில் 100-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் திரண்டனர்.

பின்னர் அவர்கள் ஒவ்வொருவரும் சமூக இடைவெளியில் நின்று பரிசோதனை செய்தனர். சேலம் மாவட்ட கல்வி அலுவலர் சுமதி உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகளும் அங்கு வந்து நேற்று கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர்.

Next Story