காதலை கைவிட்டதால் ஆத்திரம்: காதலியை குத்திக்கொன்ற வாலிபர் - போலீஸ் தேடுகிறது


காதலை கைவிட்டதால் ஆத்திரம்: காதலியை குத்திக்கொன்ற வாலிபர் - போலீஸ் தேடுகிறது
x
தினத்தந்தி 15 July 2020 3:45 AM IST (Updated: 15 July 2020 12:09 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில், காதலை கைவிட்டதால் இளம்பெண்ணை குத்திக் கொலை செய்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. தலைமறைவாகி விட்ட காதலனை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

பெங்களூரு, 

பெங்களூரு கிரிநகர் அருகே வசித்து வந்தவர் நர்மதா (வயது 19). இவருக்கு துவாரகாநகரை சேர்ந்த அபிஷேக் கவுடா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் காதலாக மாறியது. 2 பேரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர். இதற்கிடையில், சமீபகாலமாக அபிஷேக் கவுடாவுடன் பேசி பழகுவதை நர்மதா நிறுத்தி விட்டதாக தெரிகிறது.

மேலும் அவர் அபிஷேக் கவுடாவுடன் இருந்த காதலை நர்மதா கைவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த காதல் விவகாரம் தொடர்பாக பேசுவதற்காக தன்னுடைய வீட்டுக்கு வரும்படி நர்மதாவை அபிஷேக் கவுடா அழைத்துள்ளார்.

அதன்படி, அங்கு சென்ற நர்மதாவிடம் தன்னை காதலிக்கும்படியும், எப்போதும் போல பேசும்படியும் அபிஷேக் கவுடா கூறியுள்ளார். ஆனால் நர்மதா மறுத்து விட்டதாக தெரிகிறது. இதுதொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் உண்டானது. இந்த நிலையில், திடீரென்று ஆத்திரமடைந்த அபிஷேக் கவுடா வீட்டில் கிடந்த கத்தியை எடுத்து நர்மதாவை சரமாரியாக குத்தியதாக தெரிகிறது. இதில், பலத்த கத்திக்குத்து காயம் அடைந்த நர்மதா பரிதாபமாக இறந்து விட்டார்.

தகவல் அறிந்ததும் கிரிநகர் போலீசார் விரைந்து சென்று நர்மதாவின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது காதலை கைவிட்டாலும், மீண்டும் காதலிக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அபிஷேக் கவுடா நர்மதாவை குத்திக் கொன்றுவிட்டு தலைமறைவானது தெரியவந்தது. இதுகுறித்து கிரிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அபிஷேக் கவுடாவை வலைவீசி தேடிவருகிறார்கள்.

Next Story