கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் 188 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் 188 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 15 July 2020 2:18 AM GMT (Updated: 15 July 2020 2:18 AM GMT)

கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டு ஒரே நாளில் 188 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 1,480-ஆக உயர்ந்தது.

கோவை,

கோவை, வெள்ளலூர் அதிவிரைப்படையில் (ஆர்.ஏ.எப்.) பணியாற்றிய காவலர் ஒருவருக்கு அண்மையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைதொடர்ந்து அதிவிரைவு படையிலுள்ள அனைத்து வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதில் 36, 35, 21 வயதுள்ள 3 வீரர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 3 பேரும் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

துடியலூரை அடுத்த ராக்கிபாளையத்தில் உள்ள நகை தயாரிப்பு நிறுவனத்தில் பாணியாற்றி வந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த நகை தயாரிப்பு நிறுவனம் தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளது. இங்கு பணியாற்றி வரும் மற்ற பணியாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

குறிச்சி மாணிக்கம் சேர்வைவீதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 ஆண்கள், ஒரு பெண், கணபதி ஓம் சக்தி நகரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 ஆண்கள் ஒரு பெண், காளப்பட்டியை சேர்ந்த 2 பேர், வெள்ளலூர் தர்மராஜா கோவில் வீதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 ஆண்கள், 2 பெண்கள், சரவணம்பட்டி அழகு நகரில் ஒரே குடும்பத்தில் 4 ஆண்கள், 2 பெண்கள், எம்.கே.பி. காலனியில் 3 பேர், ஒண்டிப்புதூர் நெசவாளர் காலனியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள், ஒரு ஆண், கருப்பு கவுண்டர் வீதியை சேர்ந்த 4 பெண்கள், 2 ஆண்கள், காரமடையை சேர்ந்த 3 பெண்கள், ஒரு ஆண், செல்வபுரம் செட்டி வீதி, சாமி அய்யர் வீதி, தெலுங்கு வீதி உள்பட வீதிகளை சேர்ந்த 25 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளி செல்லமுத்துநகரை சேர்ந்த ஒருவர், கொழிஞ்சிப்பட்டியில் 3 பேர், கோடாங்கி நாயக்கன்பட்டியில் 5 பேர் உள்பட மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 188 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

கோவை மாவட்டத்தில் முன்னதாக ஒரேநாளில் 117 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதே அதிகபட்சமாகும். இந்நிலையில் இதுவரை இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் 113 ஆண்கள், 75 பெண்கள் சேர்த்து மொத்தம் 188 பேர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு புதிய உச்சத்தை தொட்டு உள்ளது.

இதன் மூலம் கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,480 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 19 பேர் உயிரிழந்துவிட்ட நிலையில் 330 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது இ.எஸ்.ஐ. மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் 1,131 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story