திருச்சி அரியமங்கலத்தில் குடோனில் பதுக்கி வைத்திருந்த 8 டன் ரேஷன் அரிசி பறிமுதல் 3 பேர் கைது


திருச்சி அரியமங்கலத்தில் குடோனில் பதுக்கி வைத்திருந்த 8 டன் ரேஷன் அரிசி பறிமுதல் 3 பேர் கைது
x
தினத்தந்தி 15 July 2020 10:37 AM IST (Updated: 15 July 2020 10:37 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி அரியமங்கலத்தில், குடோனில் பதுக்கி வைத்திருந்த 8 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது.

பொன்மலைப்பட்டி,

திருச்சி அரியமங்கலம், திடீர்நகர் பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக அரியமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தரசு தலைமையிலான போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினார்கள்.

அப்போது, ரேஷன் அரிசியை அரைப்பதற்காக சரக்கு வாகனத்தில் அங்கிருந்தவர்கள் ஏற்றிக்கொண்டிருந்தனர். மேலும் குடோனில் 8 டன் ரேஷன் அரிசி மற்றும் மாவு மூட்டைகள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. இதைத்தொடர்ந்து குடோன் உரிமையாளரும், ரேஷன் அரிசியை வாங்கி விற்பனை செய்தவருமான அரியமங்கலத்தை சேர்ந்த இஸ்மாயில்(வயது 39) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில், ரேஷன் அரிசியை அரைத்து அதனுடன் சில தானிய மாவுகளை கலந்து, மாடு மற்றும் கோழிகளுக்கு தீவனம் தயாரித்து வருவது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இஸ்மாயில் மற்றும் சரக்கு வாகன டிரைவர் சேக்அலாவுதீன்(40), ராமமூர்த்தி(47) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் 8 டன் ரேஷன் அரிசி மற்றும் சரக்கு வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் 3 பேரும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரேஷன் அரிசி யாரிடம் இருந்து வாங்கப்பட்டது? எங்கு அவை அரைத்து மாவாக மாற்றப்படுகிறது? கொரோனா ஊரடங்கு காரணமாக ரேஷன் கடைகளில் அரசு இலவசமாக அரிசி வழங்கி வரும் நிலையில், இதற்கு அப்பகுதி ரேஷன் கடை ஊழியர்கள் உடந்தையாக உள்ளனரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story