திருப்பூர் மாவட்ட மருத்துவ பணிகளின் இணை இயக்குனருக்கு கொரோனா; கோவை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை


திருப்பூர் மாவட்ட மருத்துவ பணிகளின் இணை இயக்குனருக்கு கொரோனா; கோவை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை
x
தினத்தந்தி 15 July 2020 6:39 AM GMT (Updated: 15 July 2020 6:39 AM GMT)

திருப்பூர் மாவட்ட மருத்துவ பணிகளின் இணை இயக்குனர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு பொதுமக்கள் மட்டுமின்றி அதிகாரிகள், போலீசார் என பலருக்கும் வர தொடங்கியுள்ளது. இதன் காரணமாக அரசு அலுவலகங்கள் மற்றும் ஆஸ்பத்திரிகளில் பணிபுரியும் டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்கள் பலரும் அச்சத்தில் இருந்து வருகிறார்கள்.

கடந்த 2 வாரத்திற்கு முன்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கடந்த வாரம் மாநகராட்சி அதிகாரி ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து தற்போது அரசு அலுவலகங்கள் மற்றும் மாநகராட்சி, மண்டல அலுவலகங்களில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவ பரிசோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டு வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று திருப்பூர் மாவட்ட மருத்துவ பணிகளின் இணை இயக்குனருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

திருப்பூர் கொங்கு மெயின்ரோடு பகுதியை சேர்ந்த 53 வயதான மாவட்ட மருத்துவ பணிகளின் இணை இயக்குனருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு சளி, காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அவர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஸ்வாப் (கொரோனா) பரிசோதனை செய்தார். தொடர்ந்து விடுமுறையில் வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை பரிசோதனை முடிவுகள் வந்தது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் அவரின் குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் அவருடன் பணியாற்றிய, டாக்டர்கள் மற்றும் நர்சுகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும். இதில் தொற்று உறுதி செய்யப்படுகிறவர்களுக்கு மேல்சிகிச்சை அளிக்கப்படும். சுகாதாரத்துறை இணை இயக்குனர் இருக்கும் பகுதி கொரோனா கட்டுப்பாட்டு மண்டலமாகும். இதனால் அவருக்கு எவ்வாறு கொரோனா தொற்று ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். அந்த பகுதியில் ஏற்பட்டதா? அல்லது மருத்துவனைக்கு வரும்போது நோயாளிகளிடம் இருந்து வந்ததா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story