தர்மபுரி மாவட்டத்தில் அரசு ஊழியர் உள்பட 7 பேருக்கு கொரோனா நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகம் மூடப்பட்டது


தர்மபுரி மாவட்டத்தில் அரசு ஊழியர் உள்பட 7 பேருக்கு கொரோனா நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகம் மூடப்பட்டது
x
தினத்தந்தி 15 July 2020 1:11 PM IST (Updated: 15 July 2020 1:11 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலக உதவியாளர் உள்பட 7 பேருக்கு நேற்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த ஊழியர் பணிபுரிந்த நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகம் மூடப்பட்டது.

தர்மபுரி,

திருப்பத்தூரை சேர்ந்த 68 வயது முதியவர் தர்மபுரி மாவட்டத்திற்கு வந்தார். அவரை தனிமைப்படுத்தி பரிசோதனைக்கு உட்படுத்தியபோது கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. பாளையம்புதூர் பகுதியை சேர்ந்த 38 வயது ஆணுக்கு சளி, காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. அவரை தனிமைப்படுத்தி பரிசோதித்தபோது கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.

பென்னாகரம் கடைமடை கொட்டாவூர் பகுதியை சேர்ந்த 29 வயது கட்டிட மேஸ்திரி அண்மையில் பெங்களூருவுக்கு சென்று மீண்டும் ஊர் திரும்பினார். அவரை பரிசோதித்தபோது கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதேபோல் கடைமடை கரியம்பட்டி பகுதியை சேர்ந்த 44 வயது பெண்ணுக்கு சளி, காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. அவரை பரிசோதித்த போது கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

அரூர் டவுன் பகுதியை சேர்ந்த 45 வயது ஆண் கேரள மாநிலம் திருச்சூருக்கு சென்று திரும்பினார். அவரை பரிசோதனை செய்தபோது கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. அரூர் சின்னகுப்பம் பகுதியை சேர்ந்த 65 வயது முதியவர் அண்மையில் பெங்களூருவில் இருந்து தர்மபுரி திரும்பினார். சோதனைக்கு உட்படுத்தப்பட்ட அவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

நல்லம்பள்ளியில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வரும் 48 வயது பெண் ஆம்பூருக்கு சென்று திரும்பினார். அவரை தனிமைப்படுத்தி பரிசோதித்தபோது கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகம் நேற்று மூடப்பட்டது.

அங்கு பணிபுரிந்த ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நேற்று கொரோனா தொற்று கண்டறியப்பட்ட 7 பேரும் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Next Story