பழனியில் பழிக்குப்பழியாக நடந்த கொலையில் மேலும் ஒரு வாலிபர் சாவு முக்கிய குற்றவாளி கைது


பழனியில் பழிக்குப்பழியாக நடந்த கொலையில் மேலும் ஒரு வாலிபர் சாவு முக்கிய குற்றவாளி கைது
x
தினத்தந்தி 16 July 2020 1:57 AM GMT (Updated: 2020-07-16T07:27:12+05:30)

பழனியில், பழிக்குப்பழியாக நடந்த கொலையில் மேலும் ஒரு வாலிபர் பரிதாபமாக இறந்தார். இந்த இரட்டைக்கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

பழனி,

பழனி அருகே உள்ள புது ஆயக்குடியை சேர்ந்தவர் அலெக்ஸ்பாபு (வயது 29). இவர், தனது நண்பர்களான கணேஷ்குமார் (23), ஆனந்த் (24) ஆகியோருடன் கடந்த சில தினங்களுக்கு முன்பு பழனி அடிவாரம் மதனபுரம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அவர்களை வழிமறித்த 11 பேர் கொண்ட கும்பல், மிளகாய் பொடியை தூவி சரமாரியாக அரிவாள்களால் வெட்டினர்.

இதில் சம்பவ இடத்திலேயே கணேஷ்குமார் சுருண்டு விழுந்தார். உயிர் பிழைக்க அலெக்ஸ்பாபு, ஆனந்த் ஆகியோர் ஓடினர். இருப்பினும் அவர்களை விரட்டி சென்ற கும்பல், அலெக்ஸ்பாபுவை வெட்டி படுகொலை செய்தது. அவர்களிடம் சிக்காமல் ஆனந்த் தப்பி விட்டார். இதற்கிடையே படுகாயம் அடைந்த கணேஷ்குமார், உயிருக்கு ஆபத்தானநிலையில் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் அவர், மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இந்த இரட்டைக்கொலை தொடர்பாக பழனி அடிவாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் ஒரு வாலிபர் சாவு

விசாரணையில் பழிக்குப்பழியாக அலெக்ஸ்பாபு தீர்த்துக்கட்டப்பட்டிருப்பது தெரியவந்தது. அதாவது கடந்த 2019-ம் ஆண்டில் பழனியை அடுத்த அமரபூண்டி பகுதியில் மண்டையன் என்கிற சங்கர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் அலெக்ஸ்பாபு முக்கிய குற்றவாளியாக இருந்தார். அந்த கொலைக்கு பழி தீர்க்கவே அலெக்ஸ்பாபு கொல்லப்பட்டார்.

அலெக்ஸ்பாபுவை கொலை செய்ய திட்டமிட்டு மதனபுரத்தில் காத்திருந்த அந்த கும்பல், மோட்டார் சைக்கிளை மறித்தனர். ஆனால் அதை ஓட்டி வந்த கணேஷ்குமார் நிற்காமல் சென்று விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல், கணேஷ்குமாரை சரமாரியாக வெட்டி சாய்த்தது. ஆனால் அவருக்கும், மண்டையன் என்ற சங்கர் கொலைக்கும் தொடர்பு இல்லை. தனது நண்பரான அலெக்ஸ்பாபுவை மோட்டார் சைக்கிளில் ஏற்றி சென்றதாலேயே அவரும் படுகொலை செய்யப்பட்டார் என்று போலீசார் தெரிவித்தனர்.

முக்கிய குற்றவாளி கைது

இரட்டைக்கொலை வழக்கு தொடர்பாக ஏற்கனவே பழனி குரும்பபட்டியை சேர்ந்த சக்திவேல் (36), குபேரபட்டிணத்தை சேர்ந்த காளிதாஸ் (24), ராமநாதநகரை சேர்ந்த குணசேகரன் (24), குறவன்பாறையை சேர்ந்த சந்துரு (21), அன்னாச்செட்டி மடத்தை சேர்ந்த ராகுல் (22), மதனபுரத்தை சேர்ந்த சாந்தகுமார் (22) ஆகியோர் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் 4 பேர், 18 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.

இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான மதனபுரத்தை சேர்ந்த பெருவாளி என்ற பிரதீஷ் (30) தலைமறைவாக இருந்தார். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்தநிலையில் பழனியை அடுத்த பொருந்தலாறு அணை அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற பெருவாளி என்ற பிரதீஷை தனிப்படை போலீசார் மடக்கி பிடித்து நேற்று கைது செய்தனர்.

Next Story