கும்பகோணத்தை மாவட்டமாக அறிவிக்கக்கோரி உண்ணாவிரத போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்ததால் பரபரப்பு


கும்பகோணத்தை மாவட்டமாக அறிவிக்கக்கோரி உண்ணாவிரத போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 16 July 2020 9:35 AM IST (Updated: 16 July 2020 9:35 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணத்தை மாவட்டமாக அறிவிக்கக்கோரி உண்ணாவிரத போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கும்பகோணம்,

தஞ்சாவூர் மாவட்டத்தை இரண்டாக பிரித்து கும்பகோணத்தை புதிய வருவாய் மாவட்டமாக அறிவிக்க வேண்டும். நாச்சியார்கோவில், திருப்பனந்தாள், அம்மாப்பேட்டை ஆகிய ஊர்களை தாலுகாவாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள், வணிகர் சங்கத்தினர், தன்னார்வ அமைப்புகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி பாபநாசம், திருவிடைமருதூர், நாச்சியார்கோவில், திருப்பனந்தாள் ஆகிய ஊர்களில் பல்வேறு போராட்டங்களை, போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினர் நடத்தி வருகின்றனர்.

உண்ணாவிரத போராட்டம்

இந்தநிலையில் அனைத்து அமைப்புகள் சார்பில் நேற்று கும்பகோணம் காந்தி பூங்கா அருகே உண்ணாவிரத போராட்டமும், நாளை(வெள்ளிக்கிழமை) கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் வட்டத்தில் கடையடைப்பு போராட்டமும் நடத்தப்படும் என போராட்டக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அந்த பகுதி முழுவதும் நேற்று போலீசார் குவிக்கப்பட்டனர்.

இதையடுத்து கும்பகோணம் காந்தி பூங்கா அருகே அன்பழகன் எம்.எல்.ஏ., போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ம.க.ஸ்டாலின், தி.மு.க. மாவட்ட செயலாளர் சு.கல்யாணசுந்தரம், த.மா.கா. மாவட்ட தலைவர் ஏ.ஜிர்ஜிஸ், வர்த்த சங்க செயலாளர் கே.எஸ்.சேகர், இந்திய யூனியன் முஸ்லீம் கட்சியின் மாவட்ட செயலாளர் ஷாஜகான், தே.மு.தி.க. நிர்வாகி சங்கர், இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி பொதுச்செயலாளர் டி.குருமூர்த்தி மற்றும் பல்வேறு தன்னார்வ அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டு உண்ணாவிரத போராட்டம் நடத்த முயன்றனர்.

அனுமதி மறுப்பால் பரபரப்பு

தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்ட குழுவினரிடம், தற்போது கொரோனா ஊடரங்கு காலம் அமலில் இருப்பதாலும், கும்பகோணத்தில் கொரோனா தொற்று அதிகமாக இருப்பதாலும் உண்ணாவிர போராட்டம் நடத்தக்கூடாது என அனுமதி மறுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து போராட்டக்குழுவினர் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். உண்ணாவிரத போராட்டம் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக போராட்டக்குழுவினர் தெரிவித்தனர். 

Next Story