திருச்சி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வினியோகம் தொடங்கியது


திருச்சி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வினியோகம் தொடங்கியது
x
தினத்தந்தி 16 July 2020 12:45 PM IST (Updated: 16 July 2020 12:45 PM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாவட்டத்தில் உள்ள எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 படிக்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு நேற்று முதல் பாடப்புத்தகங்கள் வினியோகிக்கும் பணி தொடங்கியது.

திருச்சி,

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுக்கொண்டே செல்வதால் ஜூன் மாதம் திறக்கப்பட வேண்டிய பள்ளிகள் இந்த ஆண்டு இன்னும் திறக்கப்படவில்லை. அடுத்த மாதமாவது பள்ளிகள் திறக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் மத்தியில் ஏற்பட்டு உள்ளது.

பள்ளிகள் திறக்கப்படவில்லை என்றாலும் இந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 அரசு பொது தேர்வு எழுத உள்ள மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசு அவர்களுக்கான இலவச பாடபுத்தகங்களை பள்ளிகளுக்கு ஏற்கனவே அனுப்பி வைத்தது. இந்த பாட புத்தகங்கள் மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்களில் இருந்து சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்தநிலையில் காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15-ந்தேதி பாட புத்தகங்களை மாணவ- மாணவிகளுக்கு நேரடியாக வழங்க தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, திருச்சி மாவட்டத்தில் உள்ள 140 அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளிகள், 127 மேல்நிலைப்பள்ளிகளிலும் பாட புத்தகங்கள் வழங்கும் பணி நேற்று தொடங்கியது.

பாட புத்தகங்களை அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மாணவ- மாணவிகளுக்கு வழங்கினார்கள். பாட புத்தகங்களை வாங்குவதற்காக வந்த மாணவ- மாணவிகள் கைகளை கிருமி நாசினி திரவம் மூலம் கழுவிய பின்னரே பள்ளிக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். சமூக இடைவெளியை பின்பற்றி அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வழங்கப்பட்டது.

திருச்சி மாவட்டம் முழுவதும் 29 ஆயிரத்து 559 பத்தாம் வகுப்பு மாணவர்களும், 23 ஆயிரத்து 636 பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களும் இந்த ஆண்டு பொது தேர்வு எழுத உள்ளனர். அவர்களுக்கு பாடபுத்தகங்கள் வழங்கும் பணி நேற்று தொடங்கி உள்ளது. இந்த மாத இறுதிக்குள் அனைவருக்கும் வழங்கப்பட்டு விடும் என கல்வி துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சில மாணவ -மாணவிகள் பாடபுத்தகங்களை தங்களது மடிக்கணினியில் பதிவேற்றம் செய்து கொடுக்கும்படி கேட்டுக்கொண்டனர். அவர்களுக்கு ஆசிரியர்கள் மடிக்கணினி மற்றும் பென்டிரைவிலும் பதிவு செய்து கொடுத்து அவற்றை எவ்வாறு பதிவிறக்கம் செய்து படிக்க வேண்டும் என செயல்விளக்கமும் அளித்தனர்.

இதேபோல் பல்வேறு பள்ளிகளில் நேற்று 118-வது பிறந்த நாளையொட்டி காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் ஆசிரியர்கள் மற்றும் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

Next Story