10-ம் வகுப்பு, பிளஸ்-2 மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கும் பணி தொடங்கியது


10-ம் வகுப்பு, பிளஸ்-2 மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கும் பணி தொடங்கியது
x
தினத்தந்தி 16 July 2020 2:40 PM IST (Updated: 16 July 2020 2:40 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்களை வழங்கும் பணி நேற்று தொடங்கியது.

தர்மபுரி,

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதால் தமிழகத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஆன்லைன் மூலமாகவும், கல்விதொலைக்காட்சி மூலமாகவும் பாடங்களை நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக 10-ம் வகுப்பு, பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் பணி காமராஜர் பிறந்தநாளான நேற்று முதல் தொடங்கியது.

தர்மபுரி மாவட்டத்தில் 123 அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் மொத்தம் 16,470 மாணவ-மாணவிகள் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்கள். இதேபோல் மாவட்டம் முழுவதும் 108 அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில் 12,284 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 படித்து வருகிறார்கள். இந்த மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்களை வழங்கும் பணி நேற்று அந்தந்த பள்ளிகளில் தொடங்கியது. பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்களை வழங்கினார்கள்.

பாடப்புத்தகங்கள் வழங்கும் பணிகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா மேற்பார்வையில் மாவட்ட கல்வி அலுவலர்கள் பாலசுப்பிரமணி (தர்மபுரி), பொன்முடி (அரூர்), சண்முகவேல் (பாலக்கோடு) ஆகியோர் அந்தந்த பள்ளிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். சமூக இடைவெளியை பின்பற்றி பள்ளிகளில் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. முககவசங்கள் அணிந்து வந்த மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் புத்தகங்களை வாங்கி சென்றனர்.

தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப் புத்தகங்களை பள்ளி தலைமை ஆசிரியை தெரசாள் வழங்கினார். 10-ம் வகுப்பு படிக்கும் 479 மாணவிகளுக்கும், பிளஸ்-2 படிக்கும் 641 மாணவிகளுக்கும் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் முத்துகுமார் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளி வளாகத்தில் காமராஜர் பிறந்த நாளையொட்டி அவருடைய உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதேபோல் பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 10, பிளஸ்-2 மாணவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன் பாடப்புத்தகங்களை வழங்கினார். இதில் ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story