தாராபுரம் பகுதியில் கருகல் நோயால் தக்காளி விளைச்சல் பாதிப்பு விவசாயிகள் வேதனை


தாராபுரம் பகுதியில் கருகல் நோயால் தக்காளி விளைச்சல் பாதிப்பு விவசாயிகள் வேதனை
x
தினத்தந்தி 16 July 2020 10:47 PM GMT (Updated: 16 July 2020 10:47 PM GMT)

தாராபுரம் பகுதியில் கருகல் நோயால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.

தாராபுரம்,

தாராபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் சிவம் ரகத்தை சேர்ந்த தக்காளி பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.இவை நல்ல உருண்டை வடிவில் பெரிய காய்களை கொண்டது. இந்த தக்காளி நல்ல சுவை மிகுந்த சதை பிடிப்பு கொண்டது.

இந்த வகை தக்காளி சுமார் 8 நாட்களுக்கு கெடாமல் இருக்கும். சிவம் தக்காளி மார்க்கெட்டில் நல்ல விலைக்கு விற்கப்பட்டு வருகிறது. இவை தாராபுரம்,வீராட்சிமங்கலம்,காளிபாளையம்,கொழுஞ்சிவாடி, அலங்கியம்,உப்புத்துறைபாளையம் உள்ளிட்ட பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் தக்காளி பயிரிடப்பட்டுள்ளது.

இது குறித்து கொழுஞ்சிவாடி பகுதியை சேர்ந்த விவசாயி கணேசன் கூறியதாவது:-

கருகல் நோய்

தற்போது சிவம் என்ற வகையைச் சார்ந்த தக்காளி மட்டுமே தாராபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதி விவசாயிகள் கடந்த மே மாதம் நடவு செய்து உள்ளனர். ஒரு ஏக்கருக்கு சுமார் 12 ஆயிரம் நாற்றுக்கள் தேவைப்படும். நடப்படும் போது நாற்றின் விலை ஒன்று 50 பைசா வீதம் ரூ.6 ஆயிரமும்,நடவு கூலி ரூ. 2 ஆயிரமும்,உழவு மற்றும் பார் கட்டுதல் செலவு ரூ.10 ஆயிரமும்,களை எடுத்தல் மற்றும் உரம் வைத்தல் ஆகிய செலவுகள் உள்படரூ.17 ஆயிரமும் சேர்த்து சுமார் ரூ.35 ஆயிரம் செலவு பிடித்தது. தக்காளி பயிர் நடவு நாட்ட நாளிலிருந்து 90 நாட்களில் விளைச்சலுக்கு வரும்.

அந்த வகையில் ஒரு ஏக்கருக்கு சுமார் 15 டன் அதாவது 15 கிலோ கொண்ட பெட்டியில் ஆயிரம் பெட்டிகள் மகசூல் கிடைத்தால் தான் அசல் தொகையை எடுக்க முடியும். தற்போது கருகல் நோயால் செடிகள் பாதி கருகி போனது. 400 பெட்டிகள் அதாவது 6 ஆயிரம் கிலோ மட்டுமே கிடைத்தது.விவசாயிகள் தங்களுடைய அசல் தொகையை எடுத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு கருகல் நோய் காரணம் என்று தெரிகிறது. இதனால் விவசாயிகள் தங்களுடைய மூலதனத்தை இழந்து நஷ்டத்துக்கு வியாபாரம் செய்ய வேண்டிய சூழ்நிலை தள்ளப்பட்டுள்ளது. என்னை போன்ற பல விவசாயிகள் வேதனை அடைந்து உளளனர். இனி வரும் காலங்களில் வேளாண் துறையினர் தக்காளிக்கு தனிக்கவனம் செலுத்தி கருகல் நோயிலிருந்து காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

Next Story