திண்டுக்கல் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 93.13 சதவீதம் பேர் தேர்ச்சி கடந்த ஆண்டை விட அதிகம்


திண்டுக்கல் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 93.13 சதவீதம் பேர் தேர்ச்சி கடந்த ஆண்டை விட அதிகம்
x
தினத்தந்தி 17 July 2020 6:21 AM IST (Updated: 17 July 2020 6:21 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் 93.13 சதவீத மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்றனர். இது கடந்த ஆண்டை விட 2.34 சதவீதம் அதிகம் ஆகும்.

திண்டுக்கல்,

தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை 9 ஆயிரத்து 8 மாணவர்கள், 10 ஆயிரத்து 304 மாணவிகள் என மொத்தம் 19 ஆயிரத்து 312 பேர் பிளஸ்-2 தேர்வு எழுதி இருந்தனர்.

இதில் 8 ஆயிரத்து 153 மாணவர்கள், 9 ஆயிரத்து 832 மாணவிகள் என மொத்தம் 17 ஆயிரத்து 985 பேர் தேர்ச்சி பெற்றனர். இதன்மூலம் மாணவர்கள் 90.51 சதவீதமும், மாணவிகள் 95.42 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் மாணவர்களை விட மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

93.13 சதவீதம்

இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் பிளஸ்-2 மாணவ-மாணவிகளின் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 93.13 சதவீதம் ஆகும். அதேநேரம் கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 90.79 சதவீதம் ஆகும். இதனால் கடந்த ஆண்டை விட, தற்போது 2.34 சதவீத மாணவ-மாணவிகள் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மேலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல பள்ளி மாணவர்கள் 100 சதவீதமும், அரசு பள்ளியில் பயின்ற மாணவர்கள் 86.69 சதவீதமும், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 96.12 சதவீதமும், மெட்ரிக் பள்ளி மாணவர்கள் 99.18 சதவீதமும், நகராட்சி பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் 74.90 சதவீதமும் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர்.

மாற்றுத்திறனாளிகள்

இதேபோல் மாவட்டம் முழுவதும் கண் பார்வையற்ற மாணவர்கள் 6 பேர், காது கேளாதவர்கள் 9 பேர் மற்றும் பிற மாற்றுத்திறனாளிகள் 38 பேர் என மொத்தம் 53 பேர் பிளஸ்-2 தேர்வு எழுதி இருந்தனர். அதில் பார்வையற்றவர்கள் 5 பேரும், காதுகேளாதவர்கள் 7 பேரும், பிற மாற்றுத்திறனாளிகள் 35 பேரும் என மொத்தம் 47 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மேலும் நர்சிங், மனையியல் மற்றும் இந்திய கலாசாரம் ஆகிய பாடங்களில் மாணவ-மாணவிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழில் 98.33 சதவீதமும், ஆங்கிலத்தில் 95.56 சதவீதமும், இயற்பியலில் 97.10 சதவீதமும், வேதியியலில் 97.45 சதவீதமும், உயிரியியலில் 95.55 சதவீதமும், தாவரவியலில் 97.79 சதவீதமும், விலங்கியலில் 96.73 சதவீதமும், கணினி அறிவியலில் 99.36 சதவீதமும், கணிதத்தில் 96.32 சதவீதமும், வணிகவியலில் 97.50 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர். 

Next Story