வாய்மேடு அருகே பரிதாபம்: 2 ஆண் குழந்தைகளை கிணற்றில் வீசிக்கொன்று பெண் தற்கொலை முயற்சி


வாய்மேடு அருகே பரிதாபம்: 2 ஆண் குழந்தைகளை கிணற்றில் வீசிக்கொன்று பெண் தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 17 July 2020 2:40 AM GMT (Updated: 17 July 2020 2:40 AM GMT)

வாய்மேடு அருகே 2 ஆண் குழந்தைகளை கிணற்றில் வீசிக்கொன்று பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மிகுந்த பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

வாய்மேடு,

நாகை மாவட்டம் வாய்மேடு அருகே உள்ள ஆயக்காரன்புலம் செட்டியார் குத்தகை கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்(வயது 37). இவர், வேதாரண்யம் அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் உதவி பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி யோகாம்பிகை(31). இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு தரணீஸ்வரன்(3½), கதிர்பாலன்(1½) ஆகிய 2 ஆண் குழந்தைகள் இருந்தனர்.

நேற்று சுரேஷ் தனது தாயை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அப்போது யோகாம்பிகை தனது குழந்தைகளுடன் வீட்டில் தனியாக இருந்தார். மருத்துவமனைக்கு சென்ற சுரேஷ், மதியம் வீட்டுக்கு வந்து பார்த்தபோது மனைவி மற்றும் குழந்தைகளை காணவில்லை. இதையடுத்து அவர் வீடு முழுவதும் மனைவி மற்றும் குழந்தைகளை தேடினார்.

கிணற்றில் குழந்தைகள்

இந்த நிலையில் வீட்டின் பின்பக்கம் உள்ள விவசாய கிணற்றுக்குள் இருந்து சத்தம் கேட்டது. இதைத்தொடர்ந்து அவர் கிணற்றுக்குள் எட்டிப்பார்த்தபோது, கிணற்றுக்குள் யோகாம்பிகை கயிற்றை பிடித்து தொங்கியபடி இருந்தார். குழந்தைகள் கிணற்றுக்குள் மூழ்கி இருந்தன. இதனால் பதறிப்போன அவர் கூச்சல் போட்டு அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார்.அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து பார்த்தனர். இதுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த வேதாரண்யம் தீயணைப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து சென்று ஏணி மூலமாக கிணற்றில் இருந்து மூழ்கி கிடந்த குழந்தைகளையும், கயிற்றில் தொங்கிய நிலையில் இருந்த யோகாம்பிகையையும் மீட்டு மேலே கொண்டு வந்தனர்.

பரிதாப சாவு

இதைத்தொடர்ந்து குழந்தைகள் தரணீஸ்வரன், கதிர்பாலன் மற்றும் தாய் யோகாம்பிகை ஆகிய 3 பேரையும் வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே 2 குழந்தைகளும் பரிதாபமாக இறந்தன. யோகாம்பிகை வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து வாய்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் யோகாம்பிகை தனது 2 குழந்தைகளை கிணற்றில் வீசிவிட்டு, கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது. கடந்த சில மாதங்களாக யோகாம்பிகை மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததும், அதனால் தனது குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று விட்டு அவர் தற்கொலைக்கு முயன்றதும் தெரிய வந்துள்ளது. 2 ஆண் குழந்தைகளை கிணற்றில் வீசிக்கொன்று பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story