பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியீடு தஞ்சை மாவட்டத்தில் 92.89 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி


பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியீடு தஞ்சை மாவட்டத்தில் 92.89 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி
x
தினத்தந்தி 17 July 2020 9:09 AM IST (Updated: 17 July 2020 9:09 AM IST)
t-max-icont-min-icon

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. தஞ்சை மாவட்டத்தில் 92.89 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தஞ்சாவூர்,

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு ஆகிய 4 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இந்த 4 கல்வி மாவட்டங்களிலும் 223 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் தேர்வினை எழுதினர். மாணவர்கள் 11 ஆயிரத்து 712 பேரும், மாணவிகள் 14 ஆயிரத்து 952 பேரும் என மொத்தம் 26 ஆயிரத்து 664 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் மாணவர்கள் 10 ஆயிரத்து 476 பேரும், மாணவிகள் 14 ஆயிரத்து 292 பேரும் என மொத்தம் 24 ஆயிரத்து 768 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.

92.89 சதவீதம் தேர்ச்சி

மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 89.45. மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 95.59. மொத்த தேர்ச்சி சதவீதம் 92.89. கடந்த ஆண்டு தஞ்சை மாவட்டம் 91.05 சதவீதம் தேர்ச்சி பெற்றது. இந்த ஆண்டு கூடுதலாக 1.84 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகள் 87.59 சதவீதமும், மாநகராட்சி பள்ளிகள் 69.91 சதவீதமும், முழு அரசு உதவி பெறும் பள்ளிகள் 92.26 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளன.

அரசு பள்ளிகள் 88.50 சதவீதமும், ஓரியண்டல் பள்ளிகள் 93.75 சதவீதமும், பகுதி அரசு உதவி பெறும் பள்ளிகள் 98.24 சதவீதமும், சுயநிதி மெட்ரிக் பள்ளிகள் 98.23 சதவீதமும், பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் சுயநிதிப்பள்ளிகள் 97.76 சதவீதமும், சமூக நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகள் 100 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளன என்று மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

52 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி

தஞ்சை மாவட்டத்தில் அரசு பள்ளிகளை சேர்ந்த 9 ஆயிரத்து 807 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இவர்களில் 8 ஆயிரத்து 679 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 88.50 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டு அரசு பள்ளிகளில் 86.21 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்தனர். இந்த ஆண்டு அதை விட கூடுதலாக 2.29 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் மொத்தம் 223 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதினர். இதில் 52 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. இதில் 10 அரசு பள்ளிகளும் அடங்கும். 

Next Story