சுகாதார ஆய்வாளர் உள்பட 52 பேருக்கு கொரோனா தொற்று கோவை மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 1,644 ஆக உயர்வு


சுகாதார ஆய்வாளர் உள்பட 52 பேருக்கு கொரோனா தொற்று கோவை மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 1,644 ஆக உயர்வு
x
தினத்தந்தி 17 July 2020 9:27 AM IST (Updated: 17 July 2020 9:27 AM IST)
t-max-icont-min-icon

சுகாதார ஆய்வாளர் உள்பட 52 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 1,644 ஆக அதிகரித்து உள்ளது.

கோவை,

கோவை மாவட்டம் சிறுமுகை ரயான் நகர் கல்பனா சாவ்லா வீதியை சேர்ந்த 50 வயது நபர் சிறுமுகை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் வசித்து வந்த பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டுள்ளது.

மேலும் மேட்டுப்பாளையம் அரவிந்த் நகரை சேர்ந்த 68 வயது நபர், போரே கவுடர் வீதியை சேர்ந்த 20 வயது வாலிபர் மற்றும் மேட்டுப்பாளையம் சிறுமுகை ரோடு பகுதியை சேர்ந்த 39 வயது நபர் ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தொற்று பாதிக்கப்பட்ட 4 பேரும் கோவையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போத்தனூரில் பரவல் அதிகரிப்பு

போத்தனூரில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு நாள்தோறும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி அங்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் போத்தனூர் சாய்நகரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 33 வயது ஆண், 6, 3 வயது சிறுவர்கள் மற்றும் மாரியப்பன் வீதியை சேர்ந்த 69 வயது முதியவர் என்று 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் காட்டூர் காளஸ்வரா நகரில் கணவன், மனைவி, சவுரிபாளையத்தை சேர்ந்த 40, 56 வயது ஆண்கள், 48, 40 வயது பெண்கள், பி.என்.புதூர் ராதாகிருஷ்ணன் வீதியை சேர்ந்த 35 வயது பெண், 15 வயது சிறுவன், செல்வபுரத்தை சேர்ந்த 72 வயது முதியவர், 62 வயது மூதாட்டி, 46 வயது ஆண், பீளமேட்டை சேர்ந்த 35 வயது பெண், 11 வயது சிறுமி ஆகியோரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

52 பேர் பாதிப்பு

டவுன்ஹால் பகுதியை சேர்ந்த 49, 55 வயது ஆண்கள், பெரியார் நகரை சேர்ந்த 48 வயது ஆண், பேரூர் செட்டிப்பாளையத்தை சேர்ந்த 26 வயது வாலிபர் சாரமேடு பானு நகரை சேர்ந்த 25 வயது பெண், ஆர்.எஸ். புரத்தை சேர்ந்த 68 வயது மூதாட்டி, தெலுங்குபாளையத்தை சேர்ந்த 43 வயது ஆண், சாய்பாபா கோவில் பகுதியை சேர்ந்த 38 வயது பெண், கவுண்டம்பாளையம் விஸ்வகர்மா நகரை சேர்ந்த 52 வயது பெண், துடியலூரை சேர்ந்த 28 வயது பெண், சுந்தராபுரத்தை சேர்ந்த 59 வயது பெண், ராக்கிபாளையத்தை சேர்ந்த 27 வயது வாலிபர், சங்கனூரை சேர்ந்த 56 வயது பெண்.

பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த 27 வயது வாலிபர், நீலாம்பூரை சேர்ந்த 82 வயது முதியவர், மதுக்கரையை சேர்ந்த 63 வயது மூதாட்டி, சரவணம்பட்டியை சேர்ந்த 24 வயது இளைஞர், உப்பிலிபாளையத்தை சேர்ந்த 30 வயது பெண் உள்பட 52 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,644 ஆக உயர்ந்துள்ளது.

256 பேர் வீடு திரும்பினர்

கோவை இ.எஸ்.ஐ. மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று ஒரே நாளில் 256 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட 1,644 பேரில் 23 பேர் உயிரிழந்துவிட்ட நிலையில் 652 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது இ.எஸ்.ஐ. மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் 969 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கலெக்டர் குடும்பத்தினர்

மாவட்ட கலெக்டர் ராஜாமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவரது குடும்ப உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் நெருங்கிய தொடர்புடைய அலுவலர்கள் உள்பட 77 பேருக்கு சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

பரிசோதனையில் அனைவருக்கும் கொரோனா பாதிப்பில்லை என்ற முடிவுகள் பெறப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஜி.ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

Next Story