திண்டிவனம் அருகே பயங்கர விபத்து சாலையோர மரத்தில் கார் மோதல்: இரும்பு கடை அதிபர் உள்பட 6 பேர் பலி


திண்டிவனம் அருகே பயங்கர விபத்து சாலையோர மரத்தில் கார் மோதல்: இரும்பு கடை அதிபர் உள்பட 6 பேர் பலி
x
தினத்தந்தி 17 July 2020 11:41 AM IST (Updated: 17 July 2020 11:41 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம் அருகே சாலையோர மரத்தில் கார் மோதிய விபத்தில் இரும்பு கடை அதிபர் உள்பட 6 பேர் பலியானார்கள்.

திண்டிவனம்,

நெல்லை மாவட்டம் திசையன்விளை தாலுகா முத்துகிருஷ்ணாபுரம் அடுத்த சூடுஉயர்ந்தான்விளை கிராமத்தை சேர்ந்தவர் சித்திரவேல். இவருடைய மகன்கள் முருகேசன் (வயது 39), முருகராஜ் (38), ஸ்ரீமுருகன் (35).

இவர்களில் முருகேசன், சென்னை தண்டலம் பகுதியில் இரும்பு கடையும், முருகராஜ் ஆவடி பகுதியில் ஹார்டுவேர்ஸ் கடையும், ஸ்ரீமுருகன் ஸ்ரீபெரும்புதூர் அருகே சின்னையன் சத்தியம் பகுதியில் இரும்பு கடையும் நடத்தி வந்தனர். இதனால் இவர்கள் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. இதன் காரணமாக முருகேசன் மற்றும் அவரது தம்பிகள் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு சென்றனர். தற்போது சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் கடைகளை திறக்க முருகேசன் குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

மரத்தில் மோதல்

அதன்படி நேற்று முன்தினம் மாலை ஒரு காரில் முருகேசன், அவரது மனைவி சிவமலர் (33), இவரது குழந்தைகள் முத்து மனிஷா (9), முத்து அனிஷா என்கிற மாயா (7), முத்து ஹரிஷ் (6) மற்றும் முருகேசனின் தம்பிகள் முருகராஜ், ஸ்ரீமுருகன் ஆகியோர் சென்னைக்கு புறப்பட்டனர். காரை சாத்தான்குளம் தாலுகா மேலநடுகுறிச்சியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (26) என்பவர் ஓட்டிச் சென்றார்.

இந்த கார், நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பாதிரி என்ற இடத்தில் வந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தறிகெட்டு ஓடி, சாலையோர மரத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது.

6 பேர் பலி

இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கி சேதமானது. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் முருகேசன், சிவமலர், முத்து அனிஷா என்கிற மாயா, முருகராஜ், ஸ்ரீமுருகன், டிரைவர் கோபாலகிருஷ்ணன் ஆகிய 6 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார்கள். இது பற்றி தகவல் அறிந்த ஒலக்கூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த முத்துமனிஷா, முத்துஹரிஷ் ஆகியோரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விசாரணை

இதற்கிடையே விபத்தில் பலியான 6 பேரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. எழிலரசன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன், திண்டிவனம் சப்-கலெக்டர் அனு, துணை போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரி ஆகியோர் நேரில் வந்து விபத்து நடந்த பகுதியை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளை பார்வையிட்டு, ஆறுதல் கூறினர். இதையடுத்து விபத்துக்குள்ளான கார், கிரேன் மூலம் மீட்கப்பட்டது. விபத்து குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story