கடலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 86 சதவீத மாணவர்கள் தேர்ச்சி


கடலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 86 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
x
தினத்தந்தி 17 July 2020 12:11 PM IST (Updated: 17 July 2020 12:11 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 86.33 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.

கடலூர்,

பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இதில் கடலூர் மாவட்டத்தில் 13,320 மாணவர்களும், 15,710 மாணவிகளும் என மொத்தம் 29,030 மாணவர்கள் தேர்வு எழுதினர். மார்ச் 24-ந்தேதி நடைபெற்ற இறுதி நாள் தேர்வை ஊரடங்கு உத்தரவால் பல மாணவர்கள் எழுத முடியாமல் போனது. இதை கருத்தில் கொண்டு அவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும் என்று அரசு அறிவித்தது.

இதையடுத்து கடந்த மே மாதம் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கி நடைபெற்றது. இப்பணி முடிந்து பல நாட்கள் ஆகியும் தேர்வு முடிவு அறிவிக்கப்படாமல் இருந்தது. இதனால் தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என்ற ஆர்வத்தில் மாணவ-மாணவிகள் இருந்து வந்தனர்.

86.33 சதவீத தேர்ச்சி

இந்த நிலையில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் முன் அறிவிப்பு ஏதும் இன்றி நேற்று காலை திடீரென பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. இதில் கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம், விருத்தாசலம், கடலூர், வடலூர் கல்வி மாவட்டங்களில் 10,950 மாணவர்களும், 14,111 மாணவிகளும் என மொத்தம் 25,061 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 86.33 சதவீத தேர்ச்சி ஆகும். கடந்த ஆண்டு கடலூர் மாவட்டம் 88 சதவீத தேர்ச்சியை பெற்றிருந்தது. இதன் மூலம் கடந்த ஆண்டை விட தற்போது 1.67 சதவீத தேர்ச்சி வீதம் குறைந்துள்ளது.

செல்போனில் குறுந்தகவல்

ஒவ்வொரு ஆண்டும் தேர்வு முடிவை அறிந்து கொள்வதற்காக தாங்கள் படித்த பள்ளிக்கூடங்களுக்கு படையெடுக்கும் மாணவ-மாணவிகள் தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாகவும், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்படாததாலும் பள்ளிக்கூடங்களுக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தனர்.

இதற்கிடையே பிளஸ்-2 மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதும் போது கொடுத்திருந்த செல்போன் எண்களுக்கே குறுந்தகவல் மூலம் தேர்வு முடிவு வெளியானது. இதனால் மாணவர்கள் செல்போனை பார்த்தே தங்களது மதிப்பெண்களை அறிந்து கொண்டனர்.

27-ந் தேதி தேர்வு

இதுகுறித்து கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரோஸ் நிர்மலா கூறுகையில், கடலூர் மாவட்டம் பிளஸ்-2 தேர்வில் 86.33 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. 24-ந்தேதி நடைபெற்ற தேர்வை மாவட்டத்தில் 9 மாணவர்கள் எழுதவில்லை. அவர்களுக்கு வருகிற 27-ந்தேதி தேர்வு நடைபெற உள்ளது.

இந்த தேர்வுக்கான புதிய நுழைவு சீட்டினை இணைய தளம் மற்றும் அவரவர் படித்த பள்ளிகளிலேயே பதிவிறக்கம் செய்து இன்று (வெள்ளிக்கிழமை) மாலைக்குள் பெற்றுக்கொள்ளலாம். தனித்தேர்வர்கள், தனித்தேர்வு மையங்களில் சென்று பெற்றுக்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றார்.

Next Story