வெளியூர் செல்பவர்களுக்கு முழுமையான விசாரணைக்கு பிறகு இ-பாஸ் வழங்கப்படும் அமைச்சர் பேட்டி


வெளியூர் செல்பவர்களுக்கு முழுமையான விசாரணைக்கு பிறகு இ-பாஸ் வழங்கப்படும் அமைச்சர் பேட்டி
x
தினத்தந்தி 18 July 2020 5:08 AM IST (Updated: 18 July 2020 5:08 AM IST)
t-max-icont-min-icon

வெளியூர் செல்பவர்களுக்கு முழுமையான விசாரணைக்கு பிறகு இ-பாஸ் வழங்கப்படும் என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறினார்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு குறித்து பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கலெக்டர் விஜயகார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.

இ-பாஸ்

அதை தொடர்ந்து அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருப்பூர் மாவட்டத்தில் 42 சோதனை சாவடிகள் அமைக் கப்பட்டு அதில் காவல்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, சுகாதாரத்துறை பணியாளர்களை நியமனம் செய்து மாவட்டத்துக்குள் வருபவர்கள் அனைவரையும் பரிசோதித்து அனுமதித்தனர். அதன்காரணமாக கொரோனா தொற்று மாவட்டத்தில் அதிகமாக ஏற்படவில்லை. வெளியூர், வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்களால் தான் கொரோனா தொற்று திருப்பூர் மாவட்டத்துக்கு வந்தது. இறப்பு, திருமணம் போன்ற முக்கிய தேவைகளுக்கு மட்டுமே இ-பாஸ் பெற்று வெளியூர் செல்ல வேண்டும்.

வெளியூரில் இருந்து யார் வந்தாலும் சோதனை சாவடிகளில் சோதனை செய்த பிறகே அனுமதிக்கப்படுவார்கள். பொய்யான காரணத்தை சொல்லி இ-பாஸ் பெறுவது இனி நடக்காது. வெளியூரில் இருந்து திருப்பூர் மாவட்டத்துக்கு வருபவர்கள், திருப்பூரில் இருந்து வெளியூர் செல்பவர்கள் யாராக இருந்தாலும் இனிமேல் முழுமையாக விசாரணை செய்து அதன்பிறகே இ-பாஸ் வழங்கப்படும்.

கண்காணிக்க குழு

இறப்பு சம்பவம் நடந்தால் அந்த வீட்டை கண்காணிக்கும் வகையில் தனியாக ஒரு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. திருப்பூர் அரசு மருத்துவக்கல்லுரி மருத்துவமனையில் 112 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். 381 பேர் பாதிக்கப்பட்டதில் 205 பேர் குணமடைந்துள்ளனர். மீதம் உள்ளவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்து 200 படுக்கை வசதிகள் செய்யப்பட்டு நோயாளிகள் சிகிச்சை பெற தயார் நிலையில் உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் முழுக்கட்டுப்பாட்டில் இருக்கிறது.

விலையில்லா வெள்ளாடு

தமிழகத்தில் வரும் ஆண்டில் கால்நடை பராமரிப்புத்துறை மூலமாக புதிதாக 1 லட்சத்து 50 ஆயிரம் பெண்களுக்கு தலா 4 வெள்ளாடுகள் வழங்கப்படும். அதுபோல் 12 ஆயிரம் பெண்களுக்கு கறவை பசு வழங்கப்பட உள்ளது. 1 லட்சத்து 50 ஆயிரம் பெண்களுக்கு தலா 25 நாட்டு கோழிகள் வழங்கப்படும். இந்த ஆண்டு 3 லட்சத்து 12 ஆயிரம் பெண்களுக்கு தமிழகம் முழுவதும் விலையில்லா வெள்ளாடுகள், கறவை பசுக்கள், நாட்டுக்கோழிகள் கொடுக்க வேண்டும் என்று முதல்- அமைச்சர் கூறியுள்ளார். அதை வழங்குவதற்கான பணிகள், பயனாளிகள் தேர்வுப்பணிகள் நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் குணசேகரன்(திருப்பூர் தெற்கு), கரைப்புதுர் நடராஜன்(பல்லடம்), விஜயகுமார்(திருப்பூர் வடக்கு), காளிமுத்து(தாராபுரம்), மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், போலீஸ் சூப்பிரண்டு திஷா மித்தல், மாநகர போலீஸ் துணை கமிஷனர் சுரேஷ்குமார், மாவட்ட வருவாய் அதிகாரி சரவணமூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ரூபன்சங்கர்ராஜ், மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் பிளஸ்-2 தேர்வில் மாணவ-மாணவிகள் தேர்ச்சி சதவீதத்தில் திருப்பூர் மாவட்டம் முதலிடத்தை பிடித்ததற்கு முதன்மை கல்வி அதிகாரி ரமேஷ் மற்றும் அதிகாரிகளுக்கு அமைச்சர் நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.

Next Story