திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்ட விழா ரத்தானதால் தேர் கூரை மூடும் பணி தொடங்கியது


திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்ட விழா ரத்தானதால் தேர் கூரை மூடும் பணி தொடங்கியது
x
தினத்தந்தி 18 July 2020 1:56 AM GMT (Updated: 18 July 2020 1:56 AM GMT)

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்ட விழா ரத்தானதால் தேர் கூரை மூடும் பணி தொடங்கியது.

திருவாரூர்,

திருவாரூரில் தியாகராஜர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பங்குனி திருவிழா கடந்த மார்ச் மாதம் 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மே 4-ந் தேதி ஆழித்தேரோட்ட விழா நடைபெறுதாக கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து ஆழித்தேரின் கண்ணாடி கூண்டுகள் கிரேன் உதவியுடன் பிரிக்கப்பட்டது. இதனுடன் சுப்பிரமணியர், விநாயகர், அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய 4 தேர்களின் கூரைகளும் பிரிக்கப்பட்டன. பங்குனி உத்திர திருவிழாவையொட்டி தினசரி உற்சவம் நடைபெற்று வந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக அறநிலைத்துறை ஆணையர் உத்தரவின்படி தியாகராஜர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதி மார்ச் மாதம் 20-ந்தேதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டது.

ஆழித்தேரோட்டம் ரத்து

இந்தநிலையில் தொடர் ஊரடங்கு காரணமாக கோவில் திறக்கப்படாததால் பங்குனி உத்திர விழா நிறைவு பெற்ற நிலையில் ஆழித்தேரோட்டம் ரத்தானது. இதனையடுத்து தேர் கூரை மூடும் பணி தொடங்கியது. இதில் கிரேன் உதவியுடன் இரும்பு துண்கள் நிலை நிறுத்தப்பட்டு கண்ணாடி கூண்டு மூடும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் ஆடிப்பூர அம்பாள் தேரோட்டம் விழாவும் ரத்தானதால் அனைத்து தேர்களின் கூரைகளும் மூடப்பட்டு வருகிறது.

திருவாரூரின் பெருமையாக கருதப்படும் வரலாற்று சிறப்பு ஆழித்தேரோட்ட விழா இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரத்தானது. இதனால் தேரோட்டம் காணாமல் ஆழித்தேர் மூடப்படுவது பக்தர்கள் இடையே வருத்தத்தை ஏற்படுத்தியது. 

Next Story