கொரோனா மருத்துவ பரிசோதனை தாமதத்தை தவிர்க்க சிறப்பு நடவடிக்கை கலெக்டர் கண்ணன் தகவல்


கொரோனா மருத்துவ பரிசோதனை தாமதத்தை தவிர்க்க சிறப்பு நடவடிக்கை கலெக்டர் கண்ணன் தகவல்
x
தினத்தந்தி 18 July 2020 10:17 AM IST (Updated: 18 July 2020 10:17 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகளில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்க சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் கண்ணன் தெரிவித்தார்.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தில் தினசரி மாவட்டம் முழுவதும் பரவலாக 1000-க்கும் மேற்பட்டவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. நேற்று முன்தினம் 989 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதுவரை 32,365 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 2,418 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படாத நிலையே உள்ளது.

விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் மட்டுமே பரிசோதனை நிலையம் செயல்பட்டு வரும் நிலையில் மதுரை, நெல்லை மருத்துவ கல்லூரிகளுக்கு சோதனை மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டபோதிலும் தாமதம் தவிர்க்க முடியாததாகி விடுகிறது. தாமதத்தால் நோய் பரவல் அதிகரிப்பதாக பரவலாக புகார் கூறப்படும் நிலை உள்ளது.

இது குறித்து கலெக்டர் கண்ணனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

விருதுநகர் மாவட்டத்தில் தினசரி 1000 பேருக்கு பரவலாக கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவதில் தாமதம் ஏற்படும் நிலை இருந்ததால் தற்போது தாமதத்தை தவிர்க்க சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை மருத்துவ பரிசோதனை நடைமுறைகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் கவனித்து வந்தனர். இதில் ஏற்படும் தாமதத்தை தவிர்ப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட வருவாய் அதிகாரி மங்களம்ராமசுப்பிரமணியம் தலைமையில் வருவாய்த்துறை அலுவலர்களை கொண்ட சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் மருத்துவ பரிசோதனை செய்யப்படுவதில் இருந்து சோதனை மாதிரிகளை பரிசோதனை மையத்திற்கு கொண்டு வரும் வரை தாமதத்தை தவிர்க்கும் நடவடிக்கையில் ஈடுபடுவார்கள். இதன் மூலம் மருத்துவ பரிசோதனைகள் உடனுக்குடன் தெரிய வாய்ப்பு ஏற்படும். தற்போது மருத்துவ பரிசோதனை செய்யப்பட மாதிரிகள் நெல்லை, மதுரை, தேனி, மருத்துவ கல்லூரிகளில் உள்ள பரிசோதனை மையங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விருதுநகர் பரிசோதனை மையத்தில் தினசரி 860 மருத்துவ பரிசோதனைகள் செய்ய வாய்ப்பு உள்ளது. இன்றைய நிலவரப்படி 390 மருத்துவ சோதனை மாதிரிகள் தான் பரிசோதனை செய்ய வேண்டிய நிலை இருந்தன. அதனையும் உடனடியாக பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்றில் இருந்து தினசரி எடுக்கப்படும் மருத்துவ பரிசோதனையின் முடிவுகள் மறுநாள் தெரிவிக்கப்படும். மருத்துவ பரிசோதனை செய்தவர் ஒரு நாள் மட்டுமே தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பரிசோதனை செய்த மறுநாள் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவரது நிலைமையை கணக்கில் கொண்டு அரசு ஆஸ்பத்திரிக்கோ அல்லது கொரோனா பராமரிப்பு மையத்துக்கோ அனுப்பி வைக்கப்படுவார். இதன் மூலம் நோய் பரவல் ஏற்படும் வாய்ப்பு தடுக்கப்படுகிறது. மாவட்டத்தில் கொரோனா சிகிச்சைக்கு அரசு ஆஸ்பத்திரிகளில் தேவையான அளவுக்கு இடம் உள்ளது. மேலும் கல்வி நிறுவனங்களில் கொரோனா பராமரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டு 1200 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. கொரோனா பராமரிப்பு மையங்களிலும் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பரிசோதனை முடிவுகளின் தாமதத்தை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்த போதிலும் கிராமப்புறங்களில் இருந்து சோதனை மாதிரி வருவதில் தாமதம் நீடிப்பதாக புகார் கூறப்படுகிறது. இதனை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Next Story