ஆடி அமாவாசையையொட்டி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்துக்கு பொதுமக்கள் வர தடை போலீசார் அறிவிப்பு


ஆடி அமாவாசையையொட்டி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்துக்கு பொதுமக்கள் வர தடை போலீசார் அறிவிப்பு
x
தினத்தந்தி 18 July 2020 7:02 AM GMT (Updated: 18 July 2020 7:02 AM GMT)

கொரோனா ஊரடங்கு காரணமாக ஆடி அமாவாசையை யொட்டி அம்மா மண்டபத்துக்கு பொதுமக்கள் வர போலீசார் தடை விதித்துள்ளனர்.

ஸ்ரீரங்கம்,

கொரோனா தொற்றுநோய் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் இறுதி வாரத்திலிருந்து நாடெங்கும் முக்கிய வழிபாட்டுத்தலங்கள் மூடப்பட்டன. சமூக விலகலை கருத்தில் கொண்டு பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களில் ஏராளமான கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன. அதன்படி புனிதநீராடுமிடமான ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) ஆடி அமாவாசையாகும்.

பொதுவாக ஆடி அமாவாசை அன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்திற்கு புனிதநீராடி தங்கள் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் போன்றவை கொடுக்க வருவார்கள்.

இவ்வாறு ஆயிரக்கணக்கான மக்கள் வருமிடத்தில் கொரோனா தொற்று வாய்ப்பு அதிகமிருப்பதால், அன்றைய தினம் பொதுமக்கள் அம்மா மண்டபத்திற்கு வருவதற்கு அரசின் வழிகாட்டுதல்படி போலீசார் தடைவிதித்துள்ளனர்.

இந்த தடைக்கு ஆதரவு தெரிவித்தும், பொதுமக்கள் நலன் கருதியும் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் புரோகிதர்களும் அன்றைய தினம் அம்மா மண்டபத்தில் திதி, தர்ப்பணம் போன்றவை செய்து வைக்க மாட்டோம் எனத் தெரிவித்துள்ளனர். இதை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இரு தரப்பினர் சார்பில் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையருகே அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டுள்ளது.

Next Story