ஆடிமாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


ஆடிமாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 18 July 2020 7:28 AM GMT (Updated: 18 July 2020 7:28 AM GMT)

ஆடிமாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தர்மபுரி,

ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் நேற்று சிறப்பு வழிபாடு மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார சேவையும் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டு சமூக இடைவெளியை கடைபிடித்து வழிபாடு நடத்தினார்கள்.

தர்மபுரி கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் கோவிலில் ஆடிமாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த வளாகத்தில் உள்ள ராஜதுர்காம்பிகை அம்மனுக்கு மகாஅபிஷேகமும், யாகபூஜையும் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்த வழிபாட்டில் பங்கேற்க பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

தர்மபுரி குமாரசாமிப்பேட்டை மாரியம்மன் கோவில், இலக்கியம்பட்டியில் உள்ள புற்றுநாகர் கோவிலில் ஆடி முதல்வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதையொட்டி அங்குள்ள பாம்பு புற்றுக்கு பெண்கள் மஞ்சள், குங்குமம், பால், முட்டை ஆகியவற்றை வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர். இதேபோன்று தர்மபுரி நகரை சுற்றி உள்ள பகுதிகளில் உள்ள மாரியம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

Next Story