குடவாசல் அருகே புத்தாற்றின் குறுக்கே ரூ.3¼ கோடியில் புதிய பாலங்கள் அமைச்சர் காமராஜ் திறந்து வைத்தார்


குடவாசல் அருகே புத்தாற்றின் குறுக்கே ரூ.3¼ கோடியில் புதிய பாலங்கள் அமைச்சர் காமராஜ் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 19 July 2020 9:02 AM IST (Updated: 19 July 2020 9:02 AM IST)
t-max-icont-min-icon

குடவாசல் அருகே புத்தாற்றின் குறுக்கே ரூ.3¼ கோடியில் கட்டப்பட்ட புதிய பாலங்களை அமைச்சர் காமராஜ் திறந்து வைத்தார்.

குடவாசல்,

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே புத்தாற்றின் குறுக்கே ரூ.3 கோடியே 11 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள செருகளத்தூர்-சித்தாடி இணைப்பு பாலம் மற்றும் சாலியமங்கலம்- பருத்தியூர் இணைப்பு பாலம் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு கூடுதல் கலெக்டர் கமல்கிஷோர் தலைமை தாங்கினார். விழாவில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு புதிய பாலங்களை திறந்து வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மக்களுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு அவர் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் இறப்பு எண்ணிக்கையும் மிக குறைவு.

முதல்-அமைச்சரின் தலைமையில் அமைச்சர்களும், அரசு அதிகாரிகள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோர் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் தீவிரம் காட்டி வருவதால், வெகு விரைவில் கொரோனா வைரஸ் தொற்றை வெல்வோம்.

வளர்ச்சி திட்ட பணிகள்

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையால் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தொய்வு ஏற்பட கூடாது என முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் குடவாசல் ஒன்றியம் செருகளத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட புத்தாற்றின் குறுக்கே ரூ.1 கோடியே 51 லட்சத்து 8 ஆயிரம் மதிப்பீட்டில் செருகளத்துார் - சித்தாடி கிராமங்களை இணைக்கும் பாலமும், பருத்தியூர் ஊராட்சியில் புத்தாற்றின் குறுக்கே ரூ.1 கோடியே 60 லட்சத்து 12 ஆயிரம் மதிப்பீட்டில் சாலியமங்கலம் - பருத்தியூர் கிராமங்களை இணைக்கும் இணைப்பு பாலமும் என மொத்தம் ரூ.3 கோடியே 11 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 2 பாலங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

80 சதவீதம் நிறைவு

மேலும் இதேபோன்று 2011-ம் ஆண்டு முதல் தற்போதுவரை திருவாரூர் மாவட்டத்தில் 2009 சாலை மற்றும் பால பணிகள் உள்பட ரூ.8 கோடியே 76 லட்சத்து 27 ஆயிரம் மதிப்பீட்டிலான பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, அவற்றில் இதுவரை 80 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் செயற்பொறியாளர் குமார், ஊராட்சிகள் உதவி இயக்குனர் சந்தானம், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பாப்பாசுப்பிரமணியன், ஒன்றியக்குழு தலைவர் கிளாரா செந்தில், ஒன்றியக்குழு துணை தலைவர் தென்கோவன், முன்னாள் ஒன்றியக்குழு துணை தலைவர் எஸ்.ராஜேந்திரன், ஓகை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் சுவாமிநாதன், முன்னாள் பேரூராட்சி துணை தலைவர் அரசன்கோவன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆறுமுகம், சுப்பிரமணியன், செருகளத்துார் ஊராட்சிமன்ற தலைவர் மணி, பருத்தியூர் ஊராட்சி மன்ற தலைவர் சுமதிகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Next Story